கொரோனாவால் இறந்தவர்களுக்கு உரிய முறையில் இறப்பு சான்றிதழ் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனாவால் இறந்தவர்களுக்கு உரிய முறையில் இறப்பு சான்றிதழ் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2021 4:11 AM GMT (Updated: 9 July 2021 4:11 AM GMT)

கொரோனாவால் இறந்தவர்களுக்கு உரிய முறையில் இறப்பு சான்றிதழ் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களுக்கு, கொரோனாவால் பலியானார் என இறப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், அவர்களின் குடும்பத்தினரால் உரிய நிவாரண உதவிகளை பெற இயலவில்லை என சென்னை ஐகோர்ட்டில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், ‘கொரோனாவுக்கு பலியானவர்களுக்கு உரிய முறையில் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோன்று, இணைநோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் நிகழும்போது இறப்பு சான்றிதழில் ‘கொரோனாவால் மரணம்’ என குறிப்பிடாமல் இணைநோய்களால் மரணம் என்று குறிப்பிடுவதாக தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், கொரோனாவால் பலியானவர்களுக்கு, கொரோனா காரணமாக பலியானதை குறிப்பிட்டு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

உறுதிசெய்ய வேண்டும்

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனா தொற்று பாதித்து பலியானவர்களின் குடும்பத்தினர் நிவாரண உதவிகளை பெறும் வகையில், உரிய முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர், விசாரணையை தள்ளிவைத்தனர்.

Next Story