பட்டாசு வெடித்து கொண்டாட்டம் : கரூரில் பா.ஜ.க.வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு


பட்டாசு வெடித்து கொண்டாட்டம் : கரூரில் பா.ஜ.க.வினர், போலீசார் இடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 9 July 2021 7:32 AM GMT (Updated: 2021-07-09T13:02:52+05:30)

கரூரில் முககவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி கூடியதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை,

தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன், கடந்த 2019-ம் ஆண்டு தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து,  ஓரிரு மாதங்கள் கழித்து பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

அ.தி.மு.க கூட்டணியில் இருந்தபோதும் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வேல் யாத்திரை அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பா.ஜ.க., 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது.

இந்நிலையில்  மத்திய மந்திரிசபை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கான 43 புதிய மத்திய மந்திரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றிருந்தது. நேற்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய இணை அமைச்சராக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். 

இதனையடுத்து தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவராக உள்ள அண்ணாமலை அடுத்த பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியானது.

அதன்படி  தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். 

மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கபட்டதை தொடர்ந்து கரூரில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பட்டாசு வெடிக்க அனுமதி உள்ளதா என கலெக்டர் பிரபு சங்கர் கேட்டதற்கு அதனை எதிர்த்து பா.ஜ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் போலீசாருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஏராளமானோர் முககவசம் அணியாமல் சமூக இடைவெளியின்றி கூடியதை அடுத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.Next Story