பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும் - கமல்ஹாசன்


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 10 July 2021 3:48 PM GMT (Updated: 10 July 2021 3:48 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான மக்கள் நீதி மய்யத்தின் போராட்டம் தொடரும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.67-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து கொண்டிருப்பது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலையேற்றத்தை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, மத்திய, மாநில அரசுக்கு எதிராக மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் இன்று நடைபெற்றது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய, மாநில அரசுகளின் வரி பயங்கரவாதத்தினால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் உயர்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், மக்களின் வயிற்றில் அடிக்கும் அராஜகப் போக்கினைக் கண்டித்து தமிழகமெங்கும் இன்று மக்கள் நீதி மய்யம் போராட்டத்தில் ஈடுபட்டது என்றும் இந்தப் போராட்டம் தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார்.

Next Story