மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்


மேகதாது அணை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 12 July 2021 7:57 AM GMT (Updated: 2021-07-12T16:40:26+05:30)

மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது - அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும், அண்மையில் மத்திய நீர்வளத்துறை மந்திரியை சந்தித்து, இந்த பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

மேகதாது அணை அமைக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது எனக்கோரி கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியபோது, இந்த அணை கட்டுவதால், தமிழ்நாடு விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்றும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இது எதிராக அமையும் என்றும் திட்டவட்டமாக விளக்கி, இந்த அணை அமைந்திட தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என உறுதிபட தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்-மந்திரிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்து கட்சிகளின் ஆலோசனையை கேட்க முடிவு செய்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதன் படி, இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதாக இக்கூட்டம் நடைபெற்றது.

அதில் தி.மு.க சார்பில் டி.ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, அ.தி.மு.க. சார்பில் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் காங்கிரஸ் சார்பில் கே.எஸ்.அழகிரி, ரவிக்குமார், பா.ஜ.க. நயினார் நாகேந்திரன், துரைசாமி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், புரட்சி பாரதம் பூவை ஜெகன்மூர்த்தி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு அனைத்து சட்டசபை  கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் திருமாவளவன் கூறும்போது, தடையையும் மீறி கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கட்டுமானப் பணியை கையில் எடுத்த கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

பா.ஜ.க. சார்பில் பேசிய வி.பி.துரைசாமி, “காவிரி விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக ஆதரவு அளிக்கும்” எனத் தெரிவித்தார்.

அதேபோல், கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, “அணை தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிபிஎம் ஆதரவு தரும். மேகதாது விவகாரத்தில் முதல்-அமைச்சர்  தலைமையில் குழு அமைக்க வேண்டும்” என்றார். 

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என முத்தரசன் தெரிவித்தார்.

இதுபோல் 13 கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்தனர். 

இதனிடையே பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு 2 ஆண்டுகளாக தலைவர்கள் இல்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கெனவே மத்திய அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து ஆலோசனைக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

அதன் விவரம் வருமாறு:-

*  சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவதும் மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது,

* அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

* தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இத்தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில்  நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என மூன்று தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Next Story