எண்ணூர், வட சென்னை பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டே மின் திட்ட பணிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்


எண்ணூர், வட சென்னை பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டே மின் திட்ட பணிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
x
தினத்தந்தி 14 July 2021 3:15 AM GMT (Updated: 14 July 2021 3:15 AM GMT)

எண்ணூர் மற்றும் வட சென்னை பகுதிகளில் மத்திய-மாநில அரசுகளின் விதிகளுக்கு உட்பட்டே மின் திட்ட பணிகள் நடக்கின்றன என மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை,

எண்ணூர் சிறப்பு பெருளாதார மண்டல மின் திட்டத்தின் கீழ் அனல் மின் உற்பத்தி மையம், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் அரசாணையின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான முன்அனுமதிகள், தடையில்லா சான்றுகள் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு தேவையான நிலக்கரி மற்றும் கடல்நீர் கொண்டு செல்வதற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் (குழாய்கள், தாங்கு பாலங்கள், வழித்தடங்கள்) பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, காமராஜர் துறைமுகம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் ஆகியவற்றுக்கு சொந்தமான நிலங்கள் வழியாக வட சென்னை அனல் மின் நிலையம் அலகு 2-ல் இருந்து கொண்டு செல்லப்படுகிறது.

இத்திட்டத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் வழங்கப்பட்டு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் தொடர் கண்காணிப்பின்கீழ் அனைத்து கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சட்டப்பூர்வமான நிறுவனங்கள் வரையறுத்துள்ள அளவுகளின்படி உரிய இடைவெளி மற்றும் குறைந்தபட்ச உயரம் உள்ளிட்ட அளவுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

நீர்நிலைகளில் பணி மேற்கொள்ள தேவையான கட்டமைப்புகளை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்களை கொண்டு தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனல் மின் திட்ட பணிகள் நிறைவுற்ற பிறகு தற்காலிக சாலை அனைத்தும் முற்றிலுமாக நீக்கப்படும். தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் விதிகளுக்கு உட்பட்டு நடைபெற்று வருகிறது.

அதேபோல வட சென்னை அனல் மின் திட்டம் நிலை 2-க்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் பொதுப்பணித்துறையின் தடையில்லா சான்றிதழ் மற்றும் அனுமதி கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கிய பின்னர், வெளியேற்றக்கூடிய சாம்பல் கழிவுகளை கொண்டு செல்ல ஏதுவாக மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் அனுமதியோடு குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் இருந்து வெளியேறக்கூடிய அனைத்து சாம்பல் கழிவுகளும் வாகனங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்படும். அவசர காலங்களின்போது இந்த நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவுகளை கரைத்து, பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலமாக சாம்பல் குளத்துக்கு அனுப்பப்படும்.

மேற்கண்ட 2 மின் திட்டப்பணிகளும் மத்திய-மாநில அரசு துறைகள் விதித்துள்ள விதிகளின்படியும், தொடர் கண்காணிப்பின் கீழும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story