‘நீட்’ தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது


‘நீட்’ தேர்வு விண்ணப்பப் பதிவு தொடக்கம் இணையதளம் சிறிது நேரம் முடங்கியது
x
தினத்தந்தி 14 July 2021 3:26 AM GMT (Updated: 2021-07-14T08:57:00+05:30)

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது

சென்னை,

கொரோனா தொற்று காரணமாக நடப்பு கல்வியாண்டுக்கான ‘நீட்' தேர்வு தேதி குறித்த அறிவிப்பும், அந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் குறித்த அறிவிப்பும் தாமதமாகிவந்த நிலையில், நேற்று முன்தினம் அதற்கான அறிவிப்பை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

அதன்படி, நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது என்றும், இந்த தேர்வுக்கு 13-ந் தேதி (நேற்று) மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மத்திய மந்திரி அறிவித்திருந்தார்.

அந்தவகையில் நேற்று மாலை விண்ணப்பப் பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களில் அனைவரும் ஒரே நேரத்தில் தேசிய தேர்வு முகமை இணையதளத்தை நாடியதால், அந்த இணையதளம் சிறிதுநேரம் முடங்கியது. இதனால் விண்ணப்பிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் திணறினார்கள். அதன்பின்னர், மீண்டும் இணையதளம் சரியானது. அதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பிக்கத் தொடங்கினர்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வு குறித்த அறிவிப்பை தொடர்ந்து, முதுநிலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வு குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தன்னுடைய டுவிட்டர் பதிவில், ‘முதுநிலை படிப்புக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்பவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்' என்று தெரிவித்துள்ளார்.

Next Story