நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடி


நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடி
x

நடப்பு நிதி ஆண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடியாக உள்ளது.

சென்னை,

நடப்பு நிதி ஆண்டின் (2021-22) முதல் காலாண்டுக்கான நிதி நிலை அறிக்கைக்கு, இந்தியன் வங்கியின் இயக்குனர்கள் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியன் வங்கியின் நிகர லாபம் ரூ.1,182 கோடி ஆகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் நிகர லாபம் ரூ.369 கோடியாக இருந்தது. நிகர லாபம் 220 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது 3 மடங்கு அதிகரித்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3 ஆயிரத்து 874 கோடியாக இருந்த நிகர வரி வருவாய், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3 ஆயிரத்து 994 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதேபோல கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.2 ஆயிரத்து 753 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம் இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.3 ஆயிரத்து 472 கோடியாக உயர்ந்துள்ளது. இது 26 சதவீதம் உயர்வு ஆகும்.

வைப்புத்தொகை

வட்டி அல்லாத பிற வருமானம் நடப்பு காலாண்டில் ரூ.1,877 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு வட்டி அல்லாத பிற வருமானம் ரூ.1,327 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு 41 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு (2020) ஜூன் மாதம் நிலவரப்படி ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 109 கோடியாக இருந்த வைப்புத்தொகை, கடந்த ஜூன் மாத (2021) நிலவரப்படி ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்து 82 கோடியாக உள்ளது.

இதுகுறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் பத்மஜா சுந்துரு கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு அலகாபாத் வங்கியை வெற்றிகரமாக இணைத்தப்பிறகு, அதன்பயனை இந்தியன் வங்கி தற்போது அறுவடை செய்திருக்கிறது. வரும் காலங்களில் வரும் வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். கொரோனா சவாலான நேரத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய எங்களுடைய ஊழியர்களுக்கும் பாராட்டுதலையும், எங்களுக்கு ஆதரவாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.

மேற்கண்ட தகவல் இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story