பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களுக்கு அக்டோபரில் தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி


பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களுக்கு அக்டோபரில் தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
x
தினத்தந்தி 19 July 2021 10:26 PM GMT (Updated: 2021-07-20T03:56:02+05:30)

பிளஸ்-2 மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் அக்டோபரில் தேர்வு எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களை பள்ளி கல்வித்துறை, தேர்வுத்துறை அதிகாரிகள் மிகவும் அறிவுப்பூர்வமாகவும், சிறப்பாகவும், விரைவாகவும் கணக்கிட்டு வழங்கி இருக்கிறார்கள். நாளை மறுதினம் (22-ந் தேதி) மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணவர்கள் நலனை பொறுத்தமட்டில் முதல்-அமைச்சர் சரியான நேரத்தில், சரியான முடிவு எடுத்து இருக்கிறார்.

மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகளின் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. இதில் பிளஸ்-1 தேர்வில், எந்த தேர்விலும் பங்கேற்காத 1,656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 100 சதவீதம் ஆகும்.

அக்டோபரில் தேர்வு

39 ஆயிரம் தனித்தேர்வர்கள், தற்போதைய மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாமல் தேர்வு எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள் மற்றும் பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போனவர்களுக்கு தனியாக அழைப்பு விடுக்கப்படும். அதில் எத்தனை பேர் பதிவு செய்கிறார்கள் என்று பார்த்து வருகிற அக்டோபர் அல்லது செப்டம்பர் மாதத்தில் அவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது? என்பதை ஆராய்ந்து முதல்-அமைச்சர் தரும் அறிவுறுத்தலின்படி தேர்வு நடத்தப்படும்.

பிளஸ்-1 தேர்வில் ‘அரியர்’ வைத்திருந்த 33 ஆயிரத்து 557 பேர் தேர்வு நடந்திருந்தால் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று கருதி, அவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். தனித்தேர்வர்கள், தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் பிளஸ்-2 மாணவர்கள், பிளஸ்-1 தேர்வில் வரமுடியாமல் போன மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் வகையில் நடவடிக்கை எடுப்பது குறித்து, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம். மதிப்பெண் மறுமதிப்பீடு தொடர்பான வாய்ப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

மாணவர்களை தக்கவைக்க நடவடிக்கை

எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் அனைவரும் தேர்ச்சி என்ற அடிப்படையிலேயே இருக்கும். மிக விரைவில் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். ஆசிரியர்களை பயிற்சி கொடுப்பதற்காக தளர்வு அளிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தை நாங்கள் பயன்படுத்திக்கொள்கிறோம். சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும் கல்வி உரிமை சட்டத்துக்குள் கொண்டுவர வலியுறுத்துவோம்.

15 லட்சம் மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து (1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை) வெளியேறி இருக்கிறார்கள். அரசு பள்ளிகளை நாடி வரும் ஒவ்வொரு குழந்தைகளையும் (மாணவர்கள்) தக்க வைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, பள்ளி கல்வித்துறை கமிஷனர் நந்தகுமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story