அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்


அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 20 July 2021 11:50 AM GMT (Updated: 20 July 2021 11:50 AM GMT)

அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதனன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார். இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் மதுசூதனன் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. இதையடுத்து அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது. தற்போது அவர் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ‘வென்டிலேட்டர்’ பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் டாக்டர்களின் நேரடி கட்டுப்பாட்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுசூதனன் உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரி வட்டாரத்தில் விசாரித்தபோது, தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க கொடியுடன் கூடிய காரில் சசிகலா  மருத்துவமனை வந்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்து விட்டு வெளியே செல்லும் வரை காரில் காத்திருந்த சசிகலா பின்னர் மருத்துவமனை சென்று  அங்கு டாக்டர்களிடம் மதுசூதனன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், 

'மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டிருந்த மதுசூதனனை சந்திப்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம்தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் காரில் எப்படி அவர் அதிமுக கொடி கட்டி செல்லலாம்? அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தமில்லாமல் எப்படி அதிமுக கொடியை கட்டிக் கொண்டு செல்ல முடியும்.அதிமுக கொடி கட்டுவதற்கு சசிகலாவிற்கு எந்த உரிமையும் இல்லை.

எம்ஜிஆர் மனைவி ஜானகி விட்டு கொடுத்தது போல, சசிகலாவுக்கு பெருந்தன்மையோடு வவிட்டுக் கொடுக்க வேண்டும். அதிமுக ஜானகி - ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது ஜானகி அம்மாள் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி என்னால் பிரிய கூடாது, கட்சி தொடர்ந்து இயங்க வேண்டும் என்று கூறி விலகிக் கொண்டார். அதே போல அதிமுக இணைப்பிற்காக சசிகலா தடையாக இருக்கக் கூடாது. உதயநிதி ஸ்டாலின் படத்தை தலைமைசெயலகத்தில் வைக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story