11-வது முறையாக நீட்டிப்பு: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் தமிழக அரசு உத்தரவு


11-வது முறையாக நீட்டிப்பு: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 July 2021 6:06 PM GMT (Updated: 2021-07-23T23:36:46+05:30)

11-வது முறையாக நீட்டிப்பு: ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது.

விசாரணையை 3 மாதங்களுக்குள் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டது. விசாரணை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவடையாததால் அவ்வப்போது ஆணையத்துக்கு தமிழக அரசு கால நீட்டிப்பு வழங்கி வந்தது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியது.

இந்தநிலையில், ஆணையத்தின் விசாரணையை எதிர்த்து அப்பல்லோ நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு், ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளது.

இதன்காரணமாக ஆணையத்தில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில் ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து முறைப்படி விசாரிக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். இந்தநிலையில் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

இதைத்தொடர்ந்து ஆணையத்தின் கால அவகாசத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. தற்போது வழங்கப்பட்டுள்ள கால நீட்டிப்பு 11-வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story