தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முதல்-அமைச்சர் 28-ம்தேதி தொடங்கி வைக்கிறார் - மா.சுப்பிரமணியன்


தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முதல்-அமைச்சர்  28-ம்தேதி தொடங்கி வைக்கிறார் -  மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 25 July 2021 4:19 PM GMT (Updated: 2021-07-25T23:17:42+05:30)

இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முதல்-அமைச்சர் 28-ம்தேதி தொடங்கி வைக்கிறார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கருணாநிதியின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு சைதை மேற்கு பகுதி 140வது வட்ட திமுக சார்பில் 5300 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

முகக்கவசம் அணிவது ஒன்று தான் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்கு ஒரேத் தீர்வு. ஏற்கெனவே திமுக சார்பில் சட்டமன்றத்தில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் முகக்கவசங்கள் தேவையில்லை என்று மறுத்துவிட்டார்கள். பிறகு வருவாய்த் துறை மூலம் வழங்கினார்கள். அவை தரமற்ற வகையில், மிகவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த முக்கவசங்கள் மூலம் எந்தவிதமான உபயோகமும் இல்லை என்பது பிறகு கண்டறியப்பட்டது.

முகக்கவசங்கள் தரமான வகையில் என்-95, சர்ஜிக்கல் முகக்கவசம், பனியன் துணியால் செய்யப்பட்டவை வழங்கினால் அவை பாதுகாப்பாக இருக்கும். ஆனால் கடந்த ஆட்சியாளர்களால் காடாத் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவை பயனற்றத் தன்மையில் இருந்ததை அனைவருமே அறிவோம். அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பு என்பது 5 கோடி அளவில் நிதி சேர்ந்திருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை முதல்-அமைச்சர் வருகிற புதன்கிழமை காலை 10 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், அடையாறு ஆனந்தபவன் என்கிற நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்பில் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் முதலாவதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள பொதுமக்கள் பயனடைய இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து 29-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனாத் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story