தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு - அமைச்சர் துரைமுருகன் பேட்டி


தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு - அமைச்சர் துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 26 July 2021 9:53 PM GMT (Updated: 26 July 2021 9:53 PM GMT)

தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர்,

உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார்.

அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் நேற்று வரை 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடைமடை வரை தேவையான தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்படும்.

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை ஒருபோதும் சம்மதிக்க மாட்டோம் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் காவிரி நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆகியவற்றை ஒருபோதும் மதித்ததில்லை. அவர்கள் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் 48 அணைகள் கட்டப்பட்டது. தமிழகத்தில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளோம்.

இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீர் ஆதாரம் பெருகும். கடந்த ஆட்சியில் குடிமராமத்து பணிகள் முழுமையாக நடைபெறவில்லை. முறைப்படி நிதி ஒதுக்கப்பட்டு ஏரிகள் அனைத்தும் முழுவதுமாக தூர்வாரப்படும். கடந்த காலங்களில் பல இடங்களில் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் ஆதாரத்துடன் அவை வெளிபடுத்தப்படும்.

தமிழகத்தில் லாட்டரி சீட்டு கொண்டு வரப்படுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எந்தக் குறையும் சொல்ல முடியாததால் தான் இல்லாத ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறார். இருட்டு அறையில் கருப்பு பூனையை எடப்பாடி பழனிசாமி தேடிக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story