தமிழக சட்டசபை: 100 வயதை எட்டப்போகும் சபாநாயகர் நாற்காலி தேக்கு மரத்தினால் செய்யப்பட்டது


தமிழக சட்டசபை: 100 வயதை எட்டப்போகும் சபாநாயகர் நாற்காலி தேக்கு மரத்தினால் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 1 Aug 2021 2:00 AM GMT (Updated: 2021-08-01T07:30:35+05:30)

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவுக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டும் வகையில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட சபாநாயகர் நாற்காலி விரைவில் 100 வயதை எட்டப்போகிறது.

சென்னை, 

வரலாற்று சிறப்புமிக்க, தமிழக சட்டசபையின் சபாநாயகர் நாற்காலி இன்னும் சில மாதங்களில் 100 வயதை எட்டப்போகிறது. சட்டசபை செயலகம் கடந்த 99 ஆண்டுகளுக்கும் மேலாக, வரலாற்று முக்கியத்துவம் கொடுத்து இந்த நாற்காலியை மிகுந்த அக்கறையுடன் பராமரித்து வருகிறது. சென்னை மாகாணத்தின் கவர்னராக இருந்த வெலிங்டன் பிரபுவும், அவருடைய மனைவியும் கலைநயமிக்க இந்த நாற்காலியை சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு கடந்த 1922-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ந்தேதி பரிசாக வழங்கினர்.

சென்னை மாகாண சட்டமன்றம் சுதந்திரத்துக்கு பின்னர் சென்னை மாநில சட்டமன்றத்தின் மேலவையாகவும், தற்போது தமிழ்நாடு சட்டமன்றமாகவும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. வெலிங்டன் பிரபு மற்றும் அவருடைய மனைவி பரிசாக கொடுத்த நாற்காலி, சென்னை மாகாணத்தின் ஜனநாயக மரபுகளுக்கு இன்றளவும் சாட்சியாக திகழ்கிறது. இந்த நாற்காலி தேக்கு மரத்தினால் கலைநயத்துடன் செய்யப்பட்டது. நாற்காலி வலிமையாக இருப்பதால் பழுதுபார்க்கவேண்டிய தேவை இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக செனட் அரங்கம், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கம், வாலாஜா சாலையில் உள்ள பழைய கலைவாணர் அரங்கம், ஊட்டியில் உள்ள மாளிகை உள்பட பல்வேறு இடங்களுக்கு இந்த நாற்காலி சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் சேப்பாக்கத்தில் உள்ள புதிய கலைவாணர் அரங்கத்தில், சிறப்பு அம்சங்களை பெற்றிருக்கும் இந்த நாற்காலி வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு, இந்த நாற்காலிக்கு ‘வார்னிஷ்' அடிக்கப்படுகிறது. பஞ்சு இருக்கைகளும் சீரான இடைவெளியில் மாற்றம் செய்யப்படுகின்றன. நாற்காலியின் ரகசிய அறைகளும் சுத்தம் செய்யப்படுகின்றன. சபாநாயகரை தவிர, சபாநாயகர் பொறுப்புக்கு மேலான அதிகாரம் படைத்தவர்கள் அந்த நாற்காலியில் அமரலாம். ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் கவர்னர் உரையாற்ற வரும்போது, இந்த நாற்காலி கவர்னர் அமருவதற்காக வழங்கப்படுகிறது.

சபாநாயகர் நாற்காலியில் அமருவதற்கு அதிகபட்ச அதிகாரம் படைத்தவர் ஜனாதிபதி. சபாநாயகரின் நாற்காலியில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து ரகளை செய்த சர்ச்சைக்குரிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் உள்ள அவைகளில் சபாநாயகருக்கு என்று வடிவமைக்கப்பட்டுள்ள நாற்காலியை போன்றே, தமிழக சபாநாயகருக்கான நாற்காலியும் நேர்த்தியாக இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ள நிலையில், அதற்கு மகுடம் சூட்டுவது போல சபாநாயகர் நாற்காலியும் விரைவில் சதம் அடிக்க இருப்பது பெருமைக்குரிய நிகழ்வு ஆகும்.

Next Story