பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார் - கமல்ஹாசன் டூவீட்

இரண்டு முறை பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வீரமங்கை பி.வி. சிந்து, இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- தைவான் நாட்டைச் சேர்ந்த டாய் சூ யிங்கை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
இதனையடுத்து இன்று நடைபெற்ற வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள சிந்துவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முதல்-அமைச்சர் ஸ்டாலின் என பலரும் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலும் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளார். கமல்ஹாசன் தனது டுவீட்டில்,
"ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதே ஒரு சாதனை. பதக்கம் வெல்வது பெரும் சாதனை. இரண்டு முறை பதக்கம் வெல்வது வரலாற்றுச் சாதனை. புதிய வரலாற்றைப் படைத்த வீரமங்கை பி.வி. சிந்து இந்தியப் பெண்களின் பெருமிதமாகத் திகழ்கிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story