கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள்: சென்னை ஐகோர்ட்டில், அரசு அறிக்கை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 2 Aug 2021 7:27 PM GMT (Updated: 2021-08-03T00:57:21+05:30)

கொரோனா பரவலை தடுக்க 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சென்னை, 

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஓமியோபதி சிறப்பு ஆஸ்பத்திரிகளை அமைக்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

அதில், ‘‘தற்காலிக தீர்வும், பக்க விளைவுகளையும் தரும் அலோபதி மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய-மாநில அரசுகள், சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் 64 சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்பட இந்திய மருத்துவ முறைகளுக்கான 79 சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் என்ற சிறப்பு திட்டம் மூலம் சித்த மருத்துவ முறையிலான கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அமுக்கரை லேகியம் போன்ற எதிர்ப்பு சக்தி அதிகரிப்பிற் கான மருந்துகள் வழங்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு அரசே சித்த மருத்துவம் மூலம் கொரோனா தடுப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து வருவதால், மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Next Story