ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30 லட்சத்தை செலுத்த தனுசுக்கு ஐகோர்ட் உத்தரவு

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கியான ரூ.30 லட்சத்தை 48 மணி நேரத்திற்குள் செலுத்த தனுசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு தமிழக அரசு விதித்த நுழைவு வரியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன், நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். கடும் கண்டன கருத்துகளையும் விஜய்க்கு எதிராக தெரிவித்து இருந்தார்.
அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஜய் மேல்முறையீடு செய்து, அபராதம் விதித்ததற்கு இடைக்கால தடை பெற்றார். நடிகர் விஜயை போல, கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துவருகிறது.
கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து நடிகர் தனுஷ் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தனுஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 50 சதவீத வரியை செலுத்தி சொகுசு காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி அந்த காரை தனுஷ் பதிவுசெய்து கொண்டார்.
இந்தநிலையில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவந்த நடிகர் தனுஷின் சொகுசு கார் வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. அதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியதாவது:-
என்ன தொழில் செய்கிறார் என மனுவில் தெரிவிக்காதது ஏன்? பணியையோ அல்லது தொழிலையோ குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?
ரூ.50க்கும் பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் ஜி.எஸ்.டி. வரியை கட்டுகிறார்கள். பெட்ரோலில் ஜி.எஸ்.டி .கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறார?
நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும் வாங்குங்கள் ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள். மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியது தானே?
எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரி துறை கணக்கீடு செய்து பகல் 2.15க்குள் கூறவேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.வணிக வரி துறை கணக்கீடு செய்து கொடுத்தது.
அதன்பின் தீர்ப்பளித்த நீதிபதி ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரி பாக்கி ரூ.30 லட்சத்தை செலுத்த தனுஷ் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
சொகுசு கார்களுக்கு வரி விலக்கு கோருவது போன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. வரி செலுத்துவது இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் கடமை மனுதாரர்கள் தங்கள் விவரத்தை கூறாமல் தாக்கல் செய்யும் வழக்குகளை பட்டியலிடக்கூடாது - பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
Related Tags :
Next Story