கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்பு துண்டிப்பு

கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
புதுச்சேரி, ஆக.6-
கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக துண்டித்தனர்.
கேளிக்கை வரி
புதுவை நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பலர் நகராட்சியில் பதிவு செய்துகொள்ளவில்லை. மேலும் கேளிக்கை வரியும் செலுத்தவில்லை. இதுதொடர்பாக ஆபரேட்டர்களுக்கு 2 முறை நோட்டீசும் அனுப்பப்பட்டது.
கேளிக்கை வரியை செலுத்தாவிட்டால், இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கேளிக்கை வரியை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
இணைப்பு துண்டிப்பு
அதன்படி கேளிக்கை வரி செலுத்தாத அதிக நிலுவைத்தொகையான ரூ.1 கோடியே 2 லட்சம் வரிபாக்கி வைத்துள்ள 6 கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் வருவாய் அதிகாரி முத்துசிவம், உதவி பொறியாளர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் வெங்கடாசலபதி ஆகியோர் கொண்ட குழுவினர் இணைப்பு துண்டிப்பு, ஒளிபரப்பு சாதனங்களை ஜப்தி செய்தனர்.
ஆணையர் எச்சரிக்கை
இதையொட்டி நெல்லித்தோப்பு, வேல்ராம்பட்டு, சவரிராயலு வீதி, தியாகுமுதலியார் நகர், பெரியார்நகர், முத்தியால்பேட்டை கணேஷ் நகர் பகுதியில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையானது இதர வரிபாக்கி நிலுவைதாரர்களின் மீதும் தொடரும் என்று ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார்.
--------
Related Tags :
Next Story