இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நடிகர் தனுஷ் 48 மணி நேரத்துக்குள் நுழைவு வரி செலுத்த வேண்டும்


இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நடிகர் தனுஷ் 48 மணி நேரத்துக்குள் நுழைவு வரி செலுத்த வேண்டும்
x
தினத்தந்தி 5 Aug 2021 6:13 PM GMT (Updated: 5 Aug 2021 6:13 PM GMT)

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கான நுழைவு வரியை 48 மணி நேரத்துக்குள் செலுத்த வேண்டும் என்று நடிகர் தனுசுக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

வெளிநாட்டில் இருந்து 2012-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' சொகுசு காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நடிகர் விஜய்க்கு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

விஜயைபோல நடிகர் தனுசும், நுழைவு வரியை எதிர்த்து 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அவர், 2015-ம் ஆண்டு, ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் டைமண்டு' சொகுசு கார் ஒன்றை இங்கிலாந்தில் இருந்து வாங்கினார். இந்த காருக்கு தமிழக அரசு ரூ.60.66 லட்சம் நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தனுஷ் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி 50 சதவீத வரியை செலுத்தி, தன்னுடைய சொகுசு காரை சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துகொண்டார்.

இந்தநிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ் தரப்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு வந்தது.

அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘பாக்கியுள்ள 50 சதவீத நுழைவு வரியை வருகிற 9-ந்தேதி செலுத்த தனுஷ் தயாராக உள்ளார். எனவே, இந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதி கூறியதாவது:-

இந்த வழக்கு மனுவில் தனுஷ் என்று கூறியிருந்தாலும், என்ன தொழில் செய்கிறார்? என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை.

இந்த விவரங்களை மறைத்து ஏன் வழக்கு தொடர வேண்டும்?. இந்த விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டது என்பதற்கு நடிகர் தனுஷ் விளக்கம் அளிக்கவேண்டும். அதுமட்டுமல்ல, மக்கள் வரியில் அமைக்கப்பட்ட சாலையை வரி செலுத்தாமல் பயன்படுத்துவாரா?.

உதாரணத்துக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போடும் பால் வியாபாரி ஒருவர் அதற்கான வரியை செலுத்துகிறார். சோப் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் ஏழைகள் அதற்குரிய (மறைமுக) வரியை செலுத்துகின்றனர்.

தங்களது குடும்பம் கஷ்டத்தில் உள்ளதால் இந்த வரியை செலுத்த முடியவில்லை, அதனால் வரி விலக்கு வேண்டும் என்று யாராவது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனரா?.

நடிகர் தனுசுக்கு வரி விலக்கு கேட்டு வழக்கு தொடர உரிமை உள்ளது. ஆனால், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாநில அரசுக்கு நுழைவு வரி வசூலிக்க அதிகாரம் உள்ளது என்று 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த பின்னர், இந்த வழக்கை அவர் திரும்ப பெற்று, வரியை செலுத்தியிருக்க வேண்டாமா?. இதை பொறுப்புள்ள குடிமகனாக அவர் செய்யவில்லை என்றால், அவரது நோக்கம் என்ன? வரியை செலுத்தாமல் இழுத்தடிப்பதுதானே? சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். வரி செலுத்த முடியவில்லை என்று ஏழைகள் யாரும் கோர்ட்டுக்கு வருவது இல்லை.

பணம் இல்லாமல் பலர்50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை நாம் தினமும் பார்க்கிறோம். அந்த 50 ரூபாய்க்கும் அந்த ஏழை வரி செலுத்துகிறான். தனுஷ் வெளிநாட்டு சொகுசு கார்கள் மட்டுமல்ல, விமானம், ஹெலிகாப்டர் என்று எது வேண்டுமானாலும் வாங்கட்டும். அதற்குரிய வரியை அரசுக்கு முறையாக செலுத்தி விட்டால் எந்த பிரச்சினையும் இல்லையே.

இப்போது கூட பாக்கி வரியை செலுத்தி விட்டு, வழக்கை திரும்ப பெற வரவில்லை. வரியை வருகிற திங்கட்கிழமை செலுத்துகிறேன் என்று கால அவகாசம் கேட்டுதான் வந்துள்ளார். எனவே, இந்த வழக்கு பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறேன்.

வணிக வரித்துறையினர், தனுஷ் காருக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை கணக்கிட்டு, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரியும் நேரில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வணிக வரித்துறை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 50 சதவீத வரியாக ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்து 757 தனுஷ் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசியல் அமைப்பு சட்டம் பொதுமக்களுக்கு, அடிப்படை உரிமைகளை மட்டும் வழங்கவில்லை. கடமைகளையும் வழங்கியுள்ளது. ஆனால், அண்மை காலமாக உரிமைகளை கோரும் குடிமக்கள், தங்களது கடமைகளை மறந்து விடுகின்றனர். இதுபோன்ற செயலை ஒரு போதும் ஊக்கப்படுத்த முடியாது.

பொதுவாக உரிமையும், கடமையும் ஒன்றாக பயணிக்கும்போது, அது நாட்டை வளமாக்கும். அனைத்து பிரிவுகளும் வளர்ச்சியடையும், இதன்மூலம் நம் கலாசாரம் பாதுகாக்கப்படும். எனவே, மக்களின் ஜனநாயக கடமையை எடுத்துக்கூறும், இந்த ஐகோர்ட்டு எல்லை தாண்டி கருத்துகளை கூறுகிறது என்று குற்றம் சாட்ட முடியாது. இந்த தேசத்தில் சட்டம் சீராக அமல்படுத்துவதை உறுதி செய்வது இந்த கோர்ட்டுகள்தான்.

அரசியல் சட்டத்தின் கீழ் செயல்படும் இந்த ஐகோர்ட்டு, ஒன்னும், ஒன்னும் இரண்டு என்ற கணக்கை தீர்ப்பதற்காக அமைக்கப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து சொகுசு காரை இறக்குமதி செய்யும் செல்வந்தர்கள், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய நுழைவு வரியை செலுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் பெறப்பட்ட வரியை கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வரி செலுத்தும் கடமையை மக்களுக்கு நினைவூட்டுவது இந்த ஐகோர்ட்டின் கடமையாகும். சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதை எதிர்க்கும் தனுசின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவர் 48 மணி நேரத்துக்குள், பாக்கி வரித்தொகையான ரூ.30 லட்சத்து 30 ஆயிரத்து 757-யை செலுத்த வேண்டும். இனிமேல், அரசுக்கு எதிராக தொடரப்படும் ‘ரிட்' வழக்குகளில், வழக்கு தொடர்பவர்களின் தொழில் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெறவேண்டும். இல்லை என்றால், அந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிடும் ஐகோர்ட்டு பதிவுத்துறை ஊழியர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கையை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story