வீட்டுக்கே சென்று சிகிச்சை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்


வீட்டுக்கே சென்று சிகிச்சை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2021 11:34 PM GMT (Updated: 5 Aug 2021 11:34 PM GMT)

தமிழகத்தில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி,

நகரத்தை விட கிராம பகுதியில் உள்ள முதியவர்கள் மருத்துவமனைக்கு செல்வதில் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் புதிய மருத்துவ திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு தேவையான சுகாதார சேவைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், இந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ‘‘மக்களை தேடி மருத்துவம்’’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த திட்ட தொடக்க விழா, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் ஆலமரத்தடி திண்ணையில் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவ சேவைகள் அளிக்கப்படுகிறது.

இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 பேரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை பார்வையிட்டார். மேலும் அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

இதையடுத்து விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், பரிசோதனை செய்து பட்டியலிடப்பட்ட நோயாளிகளில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை களப்பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று வழங்குவார்கள்.

மேலும் நோய் ஆதரவு சேவைகள், பிசியோதெரபி மருத்துவ சேவைகள், சிறுநீரக நோயாளிகளை பராமரித்தல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை, குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து தெரிவித்தல் போன்ற ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து சுகாதார தேவைகளையும் வழங்குவதுடன் தொடர்ந்து கண்காணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமுதாய நலப்பதிவேட்டில் ஒவ்வொரு நோயாளியையும் பதிவு செய்து தொடர்ந்து கண்காணித்து வகைப்படுத்துவது இந்த திட்டத்தின் மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இந்த திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சி பெற்ற பெண் சுகாதார தன்னார்வலர்கள், இடைநிலை சுகாதார சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவு செவிலியர் ஆகியோர் பங்கு பெறுவார்கள்.

பொது சுகாதார துறையின் களப்பணியாளர்கள் இக்குழுவினரின் செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துவார்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்திட்டத்திற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் பயனாளிகளின் சேவைக்காக ஈடுபடுத்தப்படும்.

இத்திட்டத்தின் முதற்கட்ட இலக்கான 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு கோடி மக்கள் பயன்பெறுவதின் மூலம், ஆண்டு இறுதியில் மாநில அளவில் ‘அனைவருக்கும் நலவாழ்வு’ என்ற உயரிய இலக்கை அடைய இந்த திட்டம் வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, மற்றும் சென்னை ஆகிய7 மாவட்டங்களிலும் காணொலி காட்சி மூலம் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிகிச்சை வழங்க இருக்கும் செவிலியர் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையாளர்களின் பயன்பாட்டிற்காக 3 புதிய வாகனங்களின் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கால்களை இழந்த 2 பேருக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான செயற்கை கால்கள், சிறுநீரகங்கள் செயலிழந்த ஒரு நபருக்கு வயிற்றினுள் டயாலிசிஸ் செய்யப்படும் முறைக்கான மருத்துவ உபகரணங்கள், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உனிசெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பெட்டமுகிலாளம் பகுதி மலைவாழ் மக்கள் பயனடையும் வகையில் ஒரு 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story