அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்


அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி; எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்
x
தினத்தந்தி 6 Aug 2021 12:57 PM GMT (Updated: 2021-08-06T18:38:13+05:30)

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

மதுசூதனன் மரணம்

அ.தி.மு.க.வின் அவைத்தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் (வயது 80), கடந்த சில மாதங்களாக வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக வீட்டிலும், ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார்.சில மாதங்களுக்கு முன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், பின் மெல்ல உடல்நலம் தேறினார். கடந்த மாதம் அவருடைய உடல்நலம் மோசமடையவே, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, நேற்று மாலை மதுசூதனன் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மதுசூதனன் உடல், சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோருடன் வந்து, மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர் 2 பேருக்கும் நடுவே அமர்ந்து சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அங்கிருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.

சசிகலா இரங்கல்

மதுசூதனன் உடலுக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடைய குடும்பத்தாருக்கும் அவர் ஆறுதல் கூறினார். முன்னதாக, மதுசூதனன் மறைவுக்கு ஆடியோ வாயிலாக இரங்கல் தெரிவித்திருந்த சசிகலா, ‘மதுசூதனன் மறைவு அ.தி.மு.க.வுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு எனவும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் சோதனை நேரும்போதெல்லாம் உடன் நின்றவர்’ எனவும் குறிப்பிட்டார்.

மதுசூதனன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோதே, சசிகலா நேரில் சென்று அவரின் உடல்நிலை குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. மதுசூதனன் உடல் இன்று மாலை சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


Next Story