பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது


பிளஸ்-2 துணைத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 6 Aug 2021 5:09 PM GMT (Updated: 2021-08-06T22:39:57+05:30)

புதுச்சேரியில் பிளஸ்2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 265 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.

புதுச்சேரியில் பிளஸ்-2 துணைத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 265 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர்.
பிளஸ்-2 துணைத்தேர்வு
கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண்களும் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் தனியாக நடத்தப்படும் தேர்வில் பங்கேற்று அதில் வரும் மதிப்பெண்களை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அரசு அளித்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் பிளஸ்-2 துணைத்தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை அரசு தேர்வுத்துறை வெளியிட்டது. 
5 மையங்கள்
புதுவையில் தேர்வு எழுத 361 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுத வசதியாக லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப்பள்ளி, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி, கோனேரிக்குப்பம் ஆதித்யா மேல்நிலைப்பள்ளி உள்பட 5 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. 
தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர், அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
265 மாணவர்கள்
முதல் நாளான நேற்று மொழிப்பாடங்களான தமிழ், பிரெஞ்சு தேர்வு நடந்தது. இதில் 265 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். இதன் தொடர்ச்சியாக 9, 11, 13, 16, 18 மற்றும் 19-ந் தேதிகளில் தேர்வுகள் நடக்க இருக்கிறது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு வழிகாட்டுதலின் பேரில் இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ, தேர்தல் பிரிவு பொறுப்பாளர் பூபதி ஆகியோர் செய்திருந்தனர்.
========

Next Story