‘இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது’ - மாநாட்டை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு


‘இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு இருக்கிறது’ - மாநாட்டை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 Aug 2021 6:45 PM GMT (Updated: 6 Aug 2021 6:45 PM GMT)

இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர்செய்யும் கடமை நமக்கு இருக்கிறது என்றும், சூழலியல் அறிஞர்கள் அனைவரும் அரசுக்கு ஆலோசனை தாருங்கள் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 32-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ‘‘காலநிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்’’ குறித்த பன்னாட்டு மாநாடு நேற்று நடைபெற்றது.

இந்த மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மாநாட்டில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து என்.ராம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் மதுரா சுவாமிநாதன், கே.எஸ்.முரளி, சவுமியா சுவாமிநாதன், ரெங்கலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டினை தொடங்கிவைத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ் நிலத்தையும் மதிக்கும் அரசாகத்தான் தி.மு.க. அரசு எப்போதும் இருக்கும். வருகிற 13-ந்தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய இருக்கிறோம். இந்த ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக வேளாண்துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை வருகிற 14-ந்தேதி தாக்கல் செய்யப்போகிறோம்.

வேளாண்மைதான் உயிராக, உடலாக நம் நாட்டுக்கு இருக்கிறது. அந்த வேளாண்மைக்குச் சிறப்புக் கவனம் தர இருக்கிறோம். விவசாயத்திற்கு எனத் தனியாக நிதிநிலை அறிக்கை, இயற்கை வேளாண்மைக்குத் தனிக் கவனம், உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல், கிராமச் சந்தைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள், நிலத்தடி நீர்ப் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம், சென்னைப் பெருநகரத்தை ‘‘வெள்ள நீர்’’ சூழாமல் தவிர்க்க ‘‘பெருநகர வெள்ளநீர் மேலாண்மைக் குழு’’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க இருக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாக இந்த அமைச்சரவையில்தான் நீர்வளத்தைப் பாதுகாப்பதற்காகத் தனியாக, நீர்வளத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்துறை அமைச்சரை வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சராக உருவாக்கி உள்ளோம். சுற்றுச்சூழல் அமைச்சரை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக நாங்கள் நியமித்திருக்கிறோம். அதாவது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், நீர் நிலைகள், வேளாண்மை, உழவர் நலன் ஆகிய துறைகளைத் தமிழ்நாடு அரசு எந்தளவு உன்னிப்பாகக் கவனிக்கிறது என்பதை இதன் மூலம் நீங்கள் தெளிவாக உணரலாம்.

இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சினையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து சொன்ன அறிஞர்தான் நம்முடைய எம்.எஸ். சுவாமிநாதன். காலநிலை மாற்றம் குறித்து 1969-ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி இருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989-ம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

இன்று காலநிலை மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வெப்பச் சலனம் அதிகமாகி வருகிறது. வடமாநிலங்கள் சிலவற்றில், பல நேரங்களில் வெப்ப அலை அடிக்கத் தொடங்கியிருக்கிறது. உலகின் ஒரு சில பகுதிகள் ‘வெட் பல்ப் டெம்பரேச்சர்' தன்மையை எட்டிவிட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உடல் தன்னைத்தானே குளிர்விக்கும் தன்மையை இதனால் இழக்கும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். சீரான பருவம் என்பது குறைந்து வருகிறது. பருவ மழைக்காலம் என்பதுகூட வரையறுக்க முடியாததாக இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பதை மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினையாகத் தமிழ்நாடு அரசு கருதுகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கொள்வோம்.

இயற்கையைச் சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு உள்ளது. இதற்கான ஆலோசனைகளைச் சூழலியல் அறிஞர்கள் அனைவரும் அரசுக்குத் தாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். திறந்த மனத்தோடு அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியையும் அளிக்கிறேன்.

உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதையும், விவசாயம் செய்யும் பரப்பை அதிகப்படுத்துவதிலும் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. வேளாண்மையை லாபகரமான தொழிலாக உழவர்கள் கருதும் சூழலை உருவாக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்களை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அதே நேரத்தில் உரிய விலை அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். அந்த விலை எப்படிக் கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் மத்திய அரசுக்கு உணர்த்தியவர் நம்முடைய எம்.எஸ்.சுவாமிநாதன் தான்.

உணவுப் பாதுகாப்பு என்பதில் விவசாய மக்களின் பாதுகாப்பும் உள்ளடங்கும். மண்ணைக் காக்க வேண்டுமானால், மண்ணைக் காக்கும் மக்களைக் காக்க வேண்டும். அதை நோக்கியதாக உங்களது சிந்தனைகள் அமையட்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story