ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு; பா.ஜ.க.வில் சேர மாட்டார்- எடப்பாடி பழனிசாமி


ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு; பா.ஜ.க.வில்  சேர மாட்டார்- எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 9 Aug 2021 5:22 AM GMT (Updated: 2021-08-09T10:52:58+05:30)

ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அ.தி.மு.க.வில்தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

புதுடெல்லி: 

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதனால், அவர் பா.ஜ.கவில் இணைவார் என பரபரப்பாக பேசப்பட்டது. 

 தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி.  பிரதமர் மோடி தான் எங்கள் டாடி’ என்று வெளிப்படையாகவே பேசி வந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தல் தோல்விக்கு பிறகு ராஜேந்திர பாலாஜி தன்னை மன்னித்துவிடும்படியும், தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிவிட்டதாகவும் கூறி வந்தார்.

இந்த நிலையில்  நேற்று காலை 11 மணிக்கு திடீரென விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு சென்றார். அங்கு அவர் பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் பா.ஜ.கவில் சேர உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதுகுறித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
 
ராஜேந்திர பாலாஜி குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன; அவர் அ.தி.மு.க.வில்தான் உள்ளார், பா.ஜ.க.வில் இணைய மாட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட கடன்தொகை வளர்ச்சித் திட்டங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எந்த பெரிய திட்டத்தையும் இதுவரை நிறைவேற்றவில்லை; சட்டமன்றத்தையே 100 நாட்கள் கழித்துதான் கூட்டுகின்றனர்

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது செலவு கணக்கு தாக்கல் செய்வது வழக்கமான நடைமுறைதான்; அ.தி.மு.க.ஆட்சியில் நிர்வாக சீர்கேடு நடந்துள்ளது என்பது தவறான கருத்து என கூறினார்.

Next Story