நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை


நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 10 Aug 2021 2:14 AM IST (Updated: 10 Aug 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 4 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கேரளாவில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு செய்யப்படும் கொரோனா சோதனை மற்றும் ரெயில் நிலையத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் மகேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர் சேர்க்கைக்கு அனுமதி

கடந்த 5-ந் தேதி முதல் கேரளாவில் இருந்து வரும் விமானம், ரெயில்களில் வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் கடந்த 4 நாட்களில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் 270 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்கள், 2 தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களை தவிர்த்து கேரளாவில் இருந்து வரும் மற்ற அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி முதல் இடம்

மேலும் தற்போது 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்ததன் மூலம் 600 மாணவர்களை கூடுதலாக சேர்க்க வாய்ப்பு உள்ளது. மீதமுள்ள 7 மருத்துவ கல்லூரிகளில் மத்திய குழுவினரின் ஆய்வு நடைபெற்ற பின்னர் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி மிக வேகமாக நடந்து வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 87 ஆயிரத்து 240 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் 7 லட்சத்து 6 ஆயிரத்து 136 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

தனியார் ஆஸ்பத்திரிகளில் 20 லட்சத்து 47 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் கொள்முதல் செய்ததில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 49 லட்சத்து 46 ஆயிரத்து 793 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
1 More update

Next Story