கேளம்பாக்கத்தில் கடைக்குள் புகுந்து துணிகரம் வியாபாரியை கத்திமுனையில் மிரட்டி ரூ.4 லட்சம் செல்போன்கள் கொள்ளை


கேளம்பாக்கத்தில் கடைக்குள் புகுந்து துணிகரம் வியாபாரியை கத்திமுனையில் மிரட்டி ரூ.4 லட்சம் செல்போன்கள் கொள்ளை
x
தினத்தந்தி 9 Aug 2021 11:24 PM GMT (Updated: 9 Aug 2021 11:24 PM GMT)

கேளம்பாக்கத்தில் செல்போன் கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் வியாபாரியை மிரட்டி ரூ.4 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே போலேராஜ் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை மூடும் நேரத்தில் வாடிக்கையாளர்கள் போல் 4 பேர் கடைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் செல்போன் வாங்குவது போல் விற்பனையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென உள்ளே இருந்தவாறு கடையின் கதவை மூடினர். பின்னர் அந்த கும்பல், பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை காட்டி செல்போன் கடை உரிமையாளர் போலேராஜ் உள்ளிட்ட 3 பேரையும் மிரட்ட தொடங்கினர்.

பின்னர் அவர்களை கடையின் ஓரத்தில் அமரவைத்ததுடன், அவர்கள் கண்முன்னே ரூ.4 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 20 செல்போன்கள், கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

சமூகவலைத்தளங்களில் பரவல்

இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் அருகேயே இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story