தமிழகத்தில் 1,929 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் 23 பேர் உயிரிழப்பு


தமிழகத்தில் 1,929 பேருக்கு கொரோனா: 10 மாவட்டங்களில் 23 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 12:19 AM GMT (Updated: 10 Aug 2021 12:19 AM GMT)

தமிழகத்தில் நேற்று 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களில் 23 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் இருந்து வந்த ஒரு பயணிக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 54 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,109 ஆண்கள், 820 பெண்கள் என மொத்தம் 1,929 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் இருந்து வந்த ஒரு பயணிக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கோவையில் 235 பேரும், சென்னையில் 182 பேரும், ஈரோட்டில் 178 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 4 பேரும், தென்காசியில் 5 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 119 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 259 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 79 லட்சத்து 72 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 5 ஆயிரத்து 408 ஆண்களும், 10 லட்சத்து 71 ஆயிரத்து 791 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 77 ஆயிரத்து 237 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 681 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 71 ஆயிரத்து 331 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் இருவரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சேலம், தஞ்சாவூர், திருப்பூரில் தலா 5 பேரும், சென்னையில் இருவரும், கோவை, அரியலூர், கடலூர், நாமக்கல், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் தலா ஒருவரும் என 10 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 340 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,886 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 18 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 157 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 440 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70,615 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 1,886 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 223 பேரும், ஈரோட்டில் 179 பேரும், சென்னையில் 174 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 22 ஆயிரத்து 470 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 427 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story