பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்? - ப.சிதம்பரம் கேள்வி


பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்?  - ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 10 Aug 2021 9:22 AM GMT (Updated: 2021-08-10T14:52:03+05:30)

பெகாசஸ் விவகாரத்தில் எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்க வேண்டிய பிரதமர் மோடி ஏன் பேச மறுக்கிறார்? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. குரூப் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை உருவாக்கி இருக்கிறது. பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போன்றவர்களின் செல்போன்களை ஒட்டுகேட்க இது பயன்படுகிறது.

பல்வேறு வெளிநாட்டு அரசுகளுக்கு இந்த மென்பொருள் விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், 50-க்கு மேற்பட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்தியாவிலும் 300-க்கு மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது. இந்த விவகாரம் இந்திய அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந்தேதி தொடங்கியதில் இருந்து தினமும் இந்த பிரச்சினையை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இரு அவைகளும் எந்த அலுவலும் கவனிக்க முடியாமல் திண்டாடுகின்றன.

இந்த நிலையில், ‘பெகாசஸ்’ மென்பொருளை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனத்துடன் மத்திய அரசு எந்த வர்த்தக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த விளக்கம் குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெகசிஸ் உரிமையாளரின் நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்புத் துறைக்கு எந்த வர்த்தக உடன்பாடும் கிடையாது என்று அந்தத் துறை அறிவித்திருக்கிறது அது உண்மை என்று வைத்துக் கொள்வோம். ஒரு துறை குற்றமற்றது என்றால், மற்ற துறைகளின் நிலைப்பாடு என்ன?

ஏறத்தாழ 6-7 துறைகள் மீது சந்தேகம் உள்ளதே! எல்லாத் துறைகளின் சார்பிலும் பதிலளிக்கும் அதிகாரம் பிரதமர் மோடி அவர்களிடம் மட்டுமே உள்ளது. அவர் ஏன் பேச மறுக்கிறார்? என்று பதிவிட்டுள்ளார்.

Next Story