மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக இடஒதுக்கீட்டு முறை எப்படி பொருந்தும்? ஐகோர்ட்டு கேள்வி


மருத்துவ படிப்பு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்த பிறகு தமிழக இடஒதுக்கீட்டு முறை எப்படி பொருந்தும்? ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 10 Aug 2021 10:04 PM GMT (Updated: 2021-08-11T03:34:17+05:30)

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்தபிறகு தமிழக இடஒதுக்கீடு முறை அதற்கு எப்படி பொருந்தும் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஜூலையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த 27 சதவீத இடஒதுக்கீடு என்பது மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். தமிழக கல்லூரிகளுக்கு பொருந்தாது என வாதிட்டார்.

இடஒதுக்கீடு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்தபிறகு தமிழக இடஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்?’ என்று கேள்வி எழுப்பினர். பின்னர், ‘ஒருவேளை அந்த இடங்கள் மீண்டும் மாநில அரசு வசம் வழங்கப்பட்டால் மட்டுமே தமிழக அரசின் இடஒதுக்கீடு அதற்குப் பொருந்தும். இதுதொடர்பாக மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழக அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கூற முடியாது’ என கருத்து தெரிவித்தனர்.

அதற்கு வக்கீல் வில்சன், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீட்டையே அமல்படுத்த வேண்டும் என்றார்.

குழப்பத்தை ஏற்படுத்தும்

மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் நடராஜன், ‘மருத்துவ படிப்புகளில் அனைத்து மாநில மாணவர்களும் பயனடையும் நோக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, அகில இந்திய ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. முற்றிலுமாக தகுதியின் அடிப்படையில் மட்டுமே அந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

2007-08 முதல் பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீடு என்பது அகில இந்திய ரீதியிலான கொள்கை முடிவு என்பதால், அதற்கு மத்திய அரசின் இடஒதுக்கீடு மட்டுமே பொருந்தும். மாநில அரசின் இடஒதுக்கீடு பொருந்தாது. இதில் மாநில அரசின் இடஒதுக்கீட்டைப் பின்பற்றினால் குழப்பத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் மாநில அரசின் இடஒதுக்கீட்டை பின்பற்றக் கோர முடியாது’ என்றார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

Next Story