முதல், 2-வது அலைகளில் 136 பேர் சாவு கொரோனா 3-வது அலை வந்தால் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை


முதல், 2-வது அலைகளில் 136 பேர் சாவு கொரோனா 3-வது அலை வந்தால் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2021 7:09 PM GMT (Updated: 11 Aug 2021 7:09 PM GMT)

கொரோனா 3-வது அலை வந்தால் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் ஆஸ்பத்திரியில் 75 படுக்கை வசதிகள் உள்ளன. அதற்கான ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட் பிளான்ட் வசதி ரோட்டரி சங்கத்தால் (கிழக்கு) அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார். ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஜெனரேட் பிளான்ட்டை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

கொரோனா முதல் அலை, 2-வது அலைகளில் டாக்டர், செவிலியர்களை போல போலீசாரும் முன்கள பணியாளர்களாக பணியாற்றினார்கள். இதில் தமிழக காவல்துறையைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 39 பேர் இறந்தனர்.

98 சதவீதம் தடுப்பூசி

கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வந்தால் போலீசாருக்கு பெரும் சவாலாக இருக்கும். அதனால்தான் இனிமேல் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, நாம் தயார் நிலையில் இது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது.

தமிழக காவல்துறையை பொறுத்தமட்டில் 98 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு விட்டனர். இன்னும் சில நாட்களில் 100 சதவீதம் எட்டி விடும். போலீசாரின் நலன்கள் பேணி காக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவு போட்டுள்ளார்.

அதன்படி தமிழக காவலர்களின் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கூடுதல் கமிஷனர் லோகநாதன், எழும்பூர் போலீஸ் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story