ஏரிக்குள் வீடு கட்டப்பட்டுள்ளதா? ஆய்வு செய்ய கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு


ஏரிக்குள் வீடு கட்டப்பட்டுள்ளதா? ஆய்வு செய்ய கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2021 12:07 AM GMT (Updated: 12 Aug 2021 12:07 AM GMT)

ஏரிக்குள் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி ராணிப்பேட்டை கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம், கத்தியவாடி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கண்ணம்மா (வயது 80) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-

1982-ம் ஆண்டு எங்கள் கிராமத்தில் 4 ஏக்கர் 26 சென்ட் நிலம் வாங்கி, விவசாயம் செய்து வருகிறேன். என்னுடைய நிலத்துக்கு அருகே, அரசு புறம்போக்கு நிலத்தில் கனகராயர் நீர்வீழ்ச்சி என்ற ஏரி இருந்தது. இந்த ஏரி தண்ணீரை கொண்டு ஏராளமானோர் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.

தகராறு

இந்த ஏரிக்குள் செல்ல அவர்களுக்கு பாதை எதுவும் இல்லை. இதனால், என்னுடைய விவசாய நிலத்தையும், அருகில் உள்ளோரின் நிலத்தையும் போக்குவரத்து பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக அடிக்கடி தகராறு செய்கின்றனர்.

இந்த ஏரியில்தான் பஞ்சாயத்து, கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளை அமைத்துள்ளது. தற்போது இந்த ஏரிக்குள் 5 வீடுகள் கட்டப்பட்டு, அங்கு சிலர் குடியிருந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

ஆய்வு செய்யவேண்டும்

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.சிலம்புச்செல்வன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், “ஏரியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோர் நேரில் சென்று ஏரியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும். ஒருவேளை வீடுகள் இருந்தால், அந்த வீடுகளை கட்டியவர்கள், மனுதாரர் ஆகியோருக்கு வாய்ப்பு அளித்து, அவர்களிடம் விசாரணை நடத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 12 வாரத்துக்குள் இந்த ஐகோர்ட்டில் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Next Story