கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்


கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
x
தினத்தந்தி 1 Oct 2021 9:00 AM GMT (Updated: 1 Oct 2021 9:00 AM GMT)

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

சென்னை

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து காரணமாக பெருங்கடல் நீர் கதிர்வீச்சால், நஞ்சாகி வருகிறது என்பதை பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வாயிலாக நிரூபணமாகியுள்ளது.  

அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணு உலையிலிருந்து வெளியேறிய கதிர்வீச்சிலிருந்து காப்பதற்காக, 1,40,000 கர்ப்பிணிப் பெண்களும், பிஞ்சுக் குழந்தைகளும் அணு உலை அமைந்திருந்த பென்சில்வேனியாவை விட்டு வெளியேற்றப் பட்டனர். இவைத் தவிர, மாயக், செர்னோபில் ஆகிய அணு உலை விபத்துகள் நமக்கு பல்வேறு பாடங்களை கற்பித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் உலையில் அணுக் கழிவுகளை சரியாக கையாள தொழில்நுட்பம் இல்லை என்றும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றாமல் அணுமின் உற்பத்தி நடக்கிறது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து கூறி வருகின்றது. அணுக்கழிவுகளால்  மிகப்பெரிய அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பும், கதிர் வீச்சு அபாயமும் ஏற்படும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நான் எச்சரிக்கை விடுத்துள்ளேன்.

 இதன் காரணமாகவே, கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என தொடக்கத்தில் இருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.

கூடங்குளத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் மோசமான முறையில் உள்ளது. இதில் இருந்து வெளியேறும், அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான தொழில்நுட்பமும், கட்டமைப்பும் இல்லை.  

இந்த நிலையில், கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணு உலைகள் செயல்படத் தொடங்கியதும், அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் வழங்கியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளம் வளாகத்துக்குள்ளேயே கழிவுகளை கொண்டி சேமித்து வைப்பதாக கூறுவது கற்பனை செய்ய முடியாதது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அணுக் கழிவுகளை முழுமையாக செயலிழக்கச் செய்யும் தொழில்நுட்பம் இல்லாமல் திணறி வரும் நிலையில், கூடங்குளம் வளாகத்துக்குள்ளேயே அணுக் கழிவுகளை சேமித்து வைக்கும் கட்டமைப்புகளை உருவாக்க இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

எனவே, கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு உலைகளை நிரந்தரமாக இழுத்து மூடுவதோடு, தற்போது நடந்து வரும் நான்கு உலைகள் அமைக்கும் பணிகளையும் நிறுத்த ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story