கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது பிரதமருக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை


கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது பிரதமருக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 7 Oct 2021 9:12 PM GMT (Updated: 7 Oct 2021 9:12 PM GMT)

கதிர்வீச்சால் பேராபத்து நேரிடும் என்பதால் கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்கக்கூடாது என்று பிரதமருக்கு, டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்திலேயே நிரந்தரமாக சேமித்து வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஒப்புதலுடன் கூடங்குளம் அணுமின்நிலைய வளாகத்திலேயே அணுக்கழிவுகளை சேகரித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கை ஏற்படுத்த இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் செயலாகும்.

பேராபத்து நேரிடும்

கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகள் ரஷியாவுக்கு திரும்ப எடுத்து செல்லப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே அணு உலை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

அணுக்கழிவுகளை ரஷியாவுக்கு எடுத்து சென்று கையாள்வதில் பல்வேறு பிரச்சினைகளை ரஷியா சந்தித்து வருகிறது. இதன்காரணமாக அணுக்கழிவுகளை திரும்ப எடுத்து செல்வதில் ரஷியா தயக்கம் காட்டி வருகிறது.

அணுக்கழிவுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் இதனால் கதிர் வீச்சால் பேராபத்து நேரிடும். மக்களிடையே உயிர் பாதுகாப்பு அச்சமும் பலமடங்கு அதிகரிக்கும்.

திரும்ப பெற வேண்டும்

நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு இல்லாத நிலையில் கூடங்குளம் வளாகத்திலேயே தற்போது அமைக்கப்பட உள்ள சேமிப்பு கிடங்கு காலப்போக்கில் நிரந்தர கிடங்காக உருவெடுத்து விடும். எனவே, கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை ரஷியாவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுக்கழிவுகளை கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே சேமித்து வைக்கும் வகையில் சேமிப்பு கிடங்கு அமைக்க அனுமதி அளித்த இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஒப்புதலை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

உடனடி நடவடிக்கை

கூடங்குளம், கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணுமின் நிலையங்களின் அணுக்கழிவுகளை பாதுகாக்க நிரந்தர நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு உருவாக்கப்பட வேண்டும். இது, மக்கள் வசிக்காத நிலப்பகுதியில் கட்டப்படவேண்டும்.

சென்னை, புதுச்சேரி மற்றும் தென் தமிழகத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்புடன் தொடர்புடைய அதிமுக்கியமான இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story