சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா


சென்னை விமான நிலையத்தில் ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா
x
தினத்தந்தி 7 Oct 2021 9:19 PM GMT (Updated: 2021-10-08T02:49:54+05:30)

சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்ல வந்த ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா இருந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை டெல்லிக்கு விமானம் சென்றது. முன்னதாக அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 30) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் அபாயகரமான பொருள் இருப்பதாக அலாரம் ஒலித்தது.

உடனே பாதுகாப்பு அதிகாரிகள், அவரது சூட்கேசை திறந்து பார்த்தனர். அதில் இருந்த ராணுவ உடையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்தது.

ராணுவ வீரர்

இதுபற்றி விக்னேஷிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது விக்னேஷ், “நான் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறேன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துவிட்டு பணிக்கு திரும்புகிறேன். ராணுவ உடையில் தெரியாமல் துப்பாக்கி தோட்டா வந்து இருக்கலாம்” என்றார்.

ஆனால் விமானத்தில் துப்பாக்கி மற்றும் தோட்டா போன்ற அபாயகரமான பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்பதால் அவரது விமான பயணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் செய்து, விக்னேஷ் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story