உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் தி.மு.க.!


உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைப்பற்றும் தி.மு.க.!
x
தினத்தந்தி 13 Oct 2021 12:54 AM GMT (Updated: 13 Oct 2021 12:54 AM GMT)

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சீட்டு முறை என்பதால் வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்றது.

சென்னை, 

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.

இதுதவிர ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு சுயேச்சைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதால், அனைத்து வேட்பாளர்களும் சுயேச்சையாகவே போட்டியிட்டனர்.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைப்போல ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்த இயலாது. ஏனென்றால் ஒரு வாக்காளர் 4 பதவிகளுக்கு (மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்) ஓட்டு போட வேண்டும் என்பதால், வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்ததால் ஓட்டுகளை எண்ணுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்தது. அதன் பின்னர் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன. 

தேர்தல் நடந்த 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள். இதில் பல இடங்களில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். 2-வது இடத்தையே அ.தி.மு.க. பெற்றுள்ளது. இதேபோல் பல ஊராட்சிகளில் தி.மு.க. கூட்டணியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே வெற்றி வாகை சூடியுள்ளனர்.

9 மாவட்டங்களிலும் விடிய விடிய ஓட்டு எண்ணிக்கை நடந்ததால், முழுதேர்தல் முடிவும் நேற்று வெளியாகவில்லை. மொத்த முன்னணி நிலவரம் மற்றும் வெற்றி விவரத்தை பார்க்கும்போது, 9 மாவட்ட ஊராட்சிகளையும் தி.மு.க.வே கைப்பற்றும் நிலை உள்ளது. இதேபோல் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியே பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஒன்றிரண்டு இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. மற்ற கட்சிகளுக்கும் இதேநிலைதான். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 13 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 40 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், 106 ஊராட்சி தலைவர், 630 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 789 பதவி இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடந்தது. இதிலும் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணியே முன்னிலை வகித்தது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் - ஒன்றிய கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:-

தி.மு.க. - 915 இடங்களிலும், அ.தி.மு.க. - 183 இடங்களிலும், மற்றவை 129 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாவட்ட கவுன்சிலர் முன்னிலை நிலவரம்:- 

தி.மு.க. - 131 இடங்களிலும், அ.தி.மு.க. - 3 இடங்களிலும், மற்றவை 0 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

Next Story