வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை


வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை
x
தினத்தந்தி 18 Oct 2021 11:25 PM GMT (Updated: 18 Oct 2021 11:25 PM GMT)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள் உள்பட 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சென்னை,

ஊழல் செய்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போதே அறிவிப்பு வெளியிட்டார்.

ரூ.27 கோடி சொத்து குவிப்பு

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகிய 3 பேர் மீது தனித்தனியாக ஏற்கனவே ஊழல் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஓழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.

தற்போது 4-வது நபராக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் மீது ரூ.27.22 கோடிக்கு முறைகேடாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஊழல் சட்டப்பிரிவின் கீழ் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பீட்டர் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தார்.

விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை

அதன் அடிப்படையில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடுகள், நிறுவனங்கள், உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 50 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள்.

100-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனை வேட்டையில் ஈடுபட்டனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், கோவை, திருச்சி, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் சோதனை நடந்தது. மாலையிலும் இந்த சோதனை நீடித்தது.

அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு

சென்னையில் சோதனை நடந்த இடங்களில் அ.தி.மு.க.வினர் திரளாக திரண்டு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சோதனை நடந்தபோது, சி.விஜயபாஸ்கர் சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை பகுதியில் உள்ள வீட்டில் இருந்தார். 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள்.

சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் உள்ள வீடு, தியாகராயநகர் பகீரதி தெருவில் உள்ள வீடு, வளசரவாக்கம் உள்பட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

மகளுக்கு கொரோனா பாதிப்பு

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை காட்டி விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினார்கள். அந்த வீட்டின் முன்பும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கூடி நின்று கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து சமீபத்தில் மீண்ட விஜயபாஸ்கரின் மூத்தமகள் தனி அறையில் இருந்தார். இந்த விஷயம் தெரியாமல் சோதனை போட நுழைந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் முக கவசம் போட்டபடி சோதனையில் ஈடுபட்டனர்.

சுகாதாரத்துறை அதிகாரி வீட்டிலும் சோதனை

வளசரவாக்கம், பெத்தானியா நகர், 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஓய்வுபெற்ற அதிகாரி சீனிவாசன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது சீனிவாசன் சுகாதாரத்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் வீடு

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள குவாரி மற்றும் சகோதரர் நடத்தி வரும் மதர்தெரசா கல்வி நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இதேபோல் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான நபர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். இதில் புதுக்கோட்டையில் அ.தி.மு.க. நகர செயலாளரான பாஸ்கர், 9 ஏ நத்தம் பால்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் பாபு, விஜயபாஸ்கரின் உதவியாளர் அன்பானந்தம், அ.தி.மு.க. நிர்வாகியும், நகராட்சி துணை சேர்மனுமான சேட்டு, ஒப்பந்ததாரர் முருகேசன் வீடு, ஆலங்குடியை சேர்ந்த தனசேகரன் ஆகியோரது வீடுகளிலும், கைக்குறிச்சியில் உள்ள தனசேகரனின் கல்வி நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையானது நேற்று காலை 6.30 மணிக்கு மேல் தொடங்கி இரவு வரை நீடித்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும்32 இடங்களில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டார்

இந்த சோதனையின்போது வீட்டில் இருந்தவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவரம்பன் தலைமையில் குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்..

மேலும் திருச்சி, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனர். முன்னாள் அமைச்சரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தபோது பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வீட்டினுள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதேபோல வீட்டில் இருந்தவர்களையும் வெளியே அனுப்பவில்லை.

திருச்சியில் 3 இடங்களில் சோதனை

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகாில் உள்ள விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், திருச்சி கிராப்பட்டி காந்திநகரில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பரும், இலுப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் குருராஜ மன்னாரின் வீடு, மற்றொரு நண்பரான எடமலைப்பட்டி புதூர் பாப்பா காலனியில் உள்ள அரவை ஆலை உரிமையாளர் சுதாகர் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை காலை முதல் இரவு வரை நீடித்தது.

கோவையில் விஜயபாஸ்கரின் மாமனார் வீடு உள்பட 2 இடங்களிலும் சோதனை நடந்தது.

எப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டது என்ன?

விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகிய 2 பேர் மீது மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு (எப்.ஐ.ஆர்..) செய்துள்ளனர். அதில் உள்ள விவரம் வருமாறு:-

விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், சவுராஷ்டிரா தெருவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது தந்தை பெயர் சின்னதம்பி. அவர் காண்டிராக்டர். புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பணியாற்றி உள்ளார். அன்னவாசல் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். விஜயபாஸ்கரும் நிறைய தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். ராசி புளு மெட்டல்ஸ் நிறுவனத்தின் அதிபர், கிரீன் லேண்டு ஹைடெக் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர், இரிஸ் எக்கோ பவர் வென்ட்சர்ஸ் என்ற நிறுவனத்திலும் இவர் பங்குதாரர்.

இவரது மனைவி ரம்யாவும், ராசி எண்டர்பிரைசஸ் மற்றும் அன்யா எண்டர் பிரைசஸ் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். விஜயபாஸ்கர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். 2016-ம் ஆண்டும் அதே தொகுதியில் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டரான அவர் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது பெயரிலும், மனைவி பெயரிலும், தந்தை மற்றும் உறவினர்கள் பெயரிலும் ரூ.27.22 கோடிக்கு முறைகேடாக சொத்துகள் சேர்த்துள்ளார்.

14 கல்வி நிறுவனங்கள்

விஜயபாஸ்கர் தான் வசிக்கும் இலுப்பூரில் மதர் தெரசா என்ற அறக்கட்டளை பெயரில் என்ஜினீயரிங் கல்லூரி, அறிவியல் கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் உள்பட 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவருக்கு 7 டிப்பர் லாரிகள், 10 கலவை எந்திர வாகனங்கள் மற்றும் ஜே.சி.பி.க்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.6.58 கோடி. ரூ.53 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ சொகுசு கார். ரூ.40 லட்சம் மதிப்புள்ள நகைகள்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.3.99 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள். மேலும் தியாகராயநகர் பகீரதி அம்மாள் தெருவில் ரூ.14.57 கோடி மதிப்புள்ள ஒரு பங்களா வீடு மற்றும் நிறைய கம்பெனிகள் பெயரில் பங்கு முதலீடுகள் போன்றவை உள்ளன. மொத்தம் ரூ.27.22 கோடி மதிப்புள்ள சொத்துகள் வருமானத்தை மீறி வாங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story