குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் செயல்படுத்துவார் - அமைச்சர் மூர்த்தி


குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விரைவில் செயல்படுத்துவார் - அமைச்சர் மூர்த்தி
x
தினத்தந்தி 22 Oct 2021 6:49 AM GMT (Updated: 22 Oct 2021 6:49 AM GMT)

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார் என்று பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் குலுக்கல் முறையில் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வாஷிங்மெஷின், சைக்கிள், மிக்ஸி, குக்கர் பரிசுகளை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:-

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில், மதுரை மாவட்டம் ஒரு முன் மாதிரியான மாவட்டமாக செயல்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் இதுவரை 62% முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சிறப்பு முகாம் மூலம் நாளை மாவட்டம் முழுவதும் 1.2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செயல்படுத்துவார். திமுக அறிவித்த அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

வருவாய்த்துறையை போல பத்திரப்பதிவு துறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  வணிக வரித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். தீபாவளி விற்பனை முறைகேடுகளை கண்காணிக்க 1,000 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story