தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்


தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Oct 2021 9:12 AM GMT (Updated: 23 Oct 2021 9:12 AM GMT)

சிறு, குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“பச்சைத் தேயிலைக்குக் குறைவான சந்தை விலை, தினக்கூலி அதிகரிப்பு, உரம் விலை உயர்வு, தேயிலை பறிக்கும் செலவு மற்றும் பராமரிப்புச் செலவு அதிகரித்திருப்பால், நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

30 ஆயிரம் சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பச்சைத் தேயிலையை, தமிழக அரசின் இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 17 தொழில் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்கின்றன. மீதமுள்ள 35 ஆயிரம் சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள 150 தனியார் தேயிலைத் தொழிற்சாலைகள் கொள்முதல் செய்கின்றன.

தற்போது ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கான குறைந்தபட்ச விலை ரூ.25 மற்றும் ரூ.12.50 சேர்த்து மொத்தம் ரூ.37.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு ரூ.12 முதல் ரூ.15 வரை மட்டுமே வழங்கப்படுகிறது. 

தேயிலைத் தொழிற்சாலைகளின் சந்தை விலை ஒரு கிலோவுக்கு ரூ.125 என நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட சந்தை விலை குறைந்தால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்கு 'கார்பஸ்' நிதியிலிருந்து சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 வழங்கப்படும். சந்தை விலை ரூ.125-ஐ விட அதிகமானால், ஒரு கிலோ பச்சைத் தேயிலைக்குச் சிறு உற்பத்தியாளர்களுக்கு ரூ.25 கிடைக்காது. அந்தக் கூடுதல் தொகை 'கார்பஸ்' நிதிக்குத் திரும்பிச் சென்றுவிடும்.

17 இண்ட்கோ தேயிலைத் தொழிற்சாலையை நவீனப்படுத்த, நபார்டு வங்கியிடமிருந்து ரூ.70 கோடி கடனாக இண்ட்கோசர்வ் பெற்றுள்ளது. இந்தக் கடனை 'கார்பஸ்' நிதிக்குத் திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் குறைந்தபட்ச நியாய விலையை முன்கூட்டியே பெற முடியும்.

எனவே, சிறு மற்றும் குறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு முன்கூட்டியே குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகள் நவீனப்படுத்தப்பட்ட பின்னரும், சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்குக் குறைந்தபட்ச நியாய விலை கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை இண்ட்கோசர்வ் நிறுவனம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Next Story