மத்தூர் அருகே பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பலி


மத்தூர் அருகே பரிதாபம்: கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 9:21 AM GMT (Updated: 2021-10-26T14:51:09+05:30)

மத்தூர் அருகே 60 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பலியானார். 2 மணி நேரம் போராடி அவரது உடல் மீட்கப்பட்டது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பொம்மேப்பள்ளியை சேர்ந்தவர் சங்கர் (வயது 25). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை டிராக்டரில் கிருஷ்ணாபுரம் கூட்டு ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டர் வேகமாக வந்ததால் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 60 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது.

டிராக்டர் கிணற்றுக்குள் பாய்ந்ததை கண்டு சங்கர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு் அக்கம் பக்கத்தில் இருநதவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. கிணற்றில் தண்ணீர் இல்லாததால் டிரைவர் சங்கர் உடல் நசுங்கி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர். டிராக்டரையும், சங்கரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சங்கர் உடல் மீட்கப்பட்டது. டிராக்டரையும் கயிறு கட்டி கிணற்றுக்குள் இருந்து வெளியே எடுத்தனர்.

சங்கர் உடல் பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 60 அடி ஆழ கிணற்றுக்குள் டிராக்டருடன் விழுந்த டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story