காதல் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த இளம்பெண் காரில் கடத்தல்

காதல் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த இளம்பெண்ணை காரில் கடத்திய பா.ஜனதா பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இடிகரை,
கோவையை அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் வெங்கடா ஜலபதி நகரை சேர்ந்தவர் சித்ரா (வயது43). டெய்லர். இவருடைய மூத்த மகள் கீர்த்தனா (23) கோவையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் பொய்கை நல்லூரை சேர்ந்த ராமசாமியின் மகன் அர்ஜூனா (22) என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் காதலித்து தொடங்கினர். இதை அறிந்த கீர்த்தனாவின் தாய் கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நாகப்பட்டினத்தில் இருந்து வந்த அர்ஜூனா மாணவி கீர்த்தனாவை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். பின்னர் அவர், கீர்த்தனாவுடன் நாகப்பட்டினம் சென்று குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கீர்த்தனாவின் தாய் சித்ரா தனது உறவினருடன் நாகப்பட்டினம் சென்று வேதாரணயம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் கீர்த்தனா, அர்ஜூனா ஆகியோரை அழைத்து பேசினார். அப்போது சித்ரா போலீசாரிடம், எனது மகளை 10 நாட்கள் மட்டும் என்னுடன் அனுப்பி வையுங்கள். பின்னர் அவரை அனுப்பி விடுவதாக கூறி உள்ளார். உடனே அர்ஜூ னாவின் சம்மதத்தின் பேரில் கீர்த்தனாவை அழைத்து வந்தார்.
அதன்பிறகு அர்ஜூனா செல்போனில் கீர்த்தனாவை தொடர்பு கொண்டார். அப்போது கீர்த்தனா, உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. எனது தாயுடன் தான் இருப்பேன் என்று கூறி உள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அர்ஜூனா, தனது அண்ணன் அரவிந்த் (22) மற்றும் நண்பர்களுடன் கோவை கூடலூர் கவுண்டம்பாளையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார்.
அவர், கோவை பிரஸ்காலனியில் உள்ள உறவினரும், பா.ஜனதா பிரசார பிரிவு மாவட்ட தலைவருமான நாகை சிவகுமாரிடம் (49) நடந்த சம்பவம் பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து அர்ஜூனா, அவரது அண்ணன் அரவிந்த், உறவினர் ஹேம்நாத் (40), நண்பர்கள் பவன் (22), சிவா (24) மற்றும் பா.ஜனதா பிரமுகர் நாகை சிவக்குமார் ஆகியோர் கீர்த்தனாவின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு கீர்த்தனாவை தன்னுடன் வாழ வருமாறு அர்ஜூனா அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜூனா அங்கு கிடந்த இரும்பு பைப்பை எடுத்து கீர்த்தனாவின் தாய் சித்ராவை சரமாரியாக தாக்கினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் அர்ஜூனா உள்பட 6 பேரும் சேர்ந்து கீர்த்தனாவை காரில் கடத்தி சென்றனர்.
இது குறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் அளித்தனர். உடனே அவர், தனது மைக் மூலம் அனைத்து போலீஸ் நிலைய சோதனை சாவடிகளை உஷார்படுத்தினார். இதில், பெண்ணை காரில் கடத்தியவர்கள் செல்வபுரம் கட்டாஞ்சி மலை பகுதியில் செல்வது தெரியவந்தது.
உடனே போலீசார் துரிதமாக செயல்பட்டு அரைமணி நேரத்தில் அவர்களை மடக்கி பிடித்து கீர்த்தனாவை மீட்டு அவரது தாயிடம் ஓப்படைத்தனர். இதையடுத்து கீர்த்தனாவை காரில் கடத்தியதாக கணவர் அர்ஜூனா அவரது சகோதரர் அரவிந்த், உறவினர்கள் பா.ஜனதா பிரமுகர் நாகை சிவக்குமார், சோம்நாத் மற்றும் நண்பர் பவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய அர்ஜூனாவின் நண்பர் சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story






