செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு - நிவாரண உதவிகளை வழங்கினார்


செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு - நிவாரண உதவிகளை வழங்கினார்
x
தினத்தந்தி 2 Dec 2021 1:54 AM IST (Updated: 2 Dec 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து வருகிறது.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை செம்மஞ்சேரி பகுதிக்கு மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாளாக அந்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுசெய்து செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் நன்றி

இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் செம்மஞ்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளை பார்வையிட செல்லும் வழியில், அலர்மேல்மங்காபுரத்தை சேர்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும், மழைநீர் வடிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில், அவர்களுக்கு தேவைப்படும் பால், உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை வீடு, வீடாக சென்று வழங்குவதற்கும், மழைநீர் வடிவதற்கும் துரித நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். அலர்மேல்மங்காபுரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்விற்கு சென்றபோது, அங்கு தேங்கியுள்ள மழைநீர் வடிவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும், நிவாரண உதவிகளை வழங்கியமைக்கும் அப்பகுதி மக்கள் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று நன்றி தெரிவித்தனர்.

உயர்மட்ட பாலம்

பின்னர், மேடவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலையில் மழைநீர் வெளியேற 9 மீட்டர் அகலத்தில் உள்ள பாலத்தை 70 மீட்டர் அகலத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலமாக அமைக்கும் பணியையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியிலிருந்து நேரடியாக பக்கிங்காம் கால்வாயை இணைக்கும் வகையில் ரூ.47 கோடி செலவில் மழைநீர் வடிகால் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், எஸ்.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, போக்குவரத்துத்துறை முதன்மைச்செயலாளர் கே.கோபால், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story