89-வது பிறந்தநாள்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து


89-வது பிறந்தநாள்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 3 Dec 2021 4:41 AM IST (Updated: 3 Dec 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

89-வது பிறந்தநாளையொட்டி கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி 89-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.

அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கி.வீரமணியின் மனைவி மோகனாம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

கவிஞர் வைரமுத்து, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் உள்ளிட்டோரும் நேரில் வாழ்த்து கூறினர்.

வாழ்த்து செய்தி

கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெரியார் எனும் பெரும் பல்கலைக்கழகத்தில் நேரடியாகப் பயின்ற மாணவர். பகுத்தறிவு - சுயமரியாதை பாடங்களை தெளிவாக பயிற்றுவிக்கும் ஆசிரியர். சமூகநீதி போர்க்களத்தின் சளைக்காத போராளி. 11 வயதில் கைகளில் ஏந்திய லட்சியக்கொடியை 89-ம் அகவையிலும் உறுதியாகப்பிடித்து, வருங்கால தலைமுறையினரிடம் பெரியாரை பரப்பும் பெருந்தொண்டர். தாய்க்கழகமாம் திராவிடர்கழக தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நூறாண்டுகள் கடந்து நலமுடன் வாழ்க. தொண்டறம் தொடர்ந்திடுக.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, முன்னாள் எம்.பி. ஜெ.எம்.ஆரூண், ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாக்கோட்டை அன்பழகன், இ.பரந்தாமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. பனையூர் பாபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபுக்கர், திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் உள்பட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து செய்தி வெளியிட்டார்.

புத்தகங்கள் வெளியீடு

கி.வீரமணி பிறந்தநாளையொட்டி அவர் எழுதிய புத்தகங்கள் வெளியிட்டு விழா திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி பூங்குன்றன் தலைமையில் பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டனர். விழாவில் கி.வீரமணி ஏற்புரை வழங்கி பேசினார்.

Next Story