திருமணத்தை தட்டிக்கழித்த பெண் என்ஜினீயர் கொடூரக் கொலை


திருமணத்தை தட்டிக்கழித்த பெண் என்ஜினீயர் கொடூரக் கொலை
x
தினத்தந்தி 4 Dec 2021 2:27 AM IST (Updated: 4 Dec 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

திருமணத்தை தட்டிக் கழித்த பெண் என்ஜினீயர் அரிவாளால் வெட்டப்பட்டும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய தம்பியை போலீசார் தேடிவருகிறார்கள்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நேரு நகர் 5-வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். திருமண மகால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள். ஒரு மகன்.

இதில் மூத்த மகள் சுவாதி (வயது27). எம்.இ. படித்தவர். இவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்த போது தடுத்துள்ளார். மேலும் படிக்க வேண்டும் எனக்கூறி இருக்கிறார். இதனால் அவருடைய தங்கைக்கு திருமணம் செய்துள்ளனர்.

கொடூரக் கொலை

இந்த நிலையில், சுவாதிக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போதும் சுவாதி திருமணம் செய்ய மறுத்து தட்டிக்கழித்துள்ளார். மேலும் படிக்க இருப்பதாக கூறி இருக்கிறார்.

இதன் காரணமாக சமீப காலமாக குடும்பத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று இத தொடர்பாக சுவாதிக்கும், அவருடைய தம்பி சரண் என்ற சரவணக்குமாருக்கும் (21) தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டில் அவர்கள் 2 பேர் மட்டும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த சரவணக்குமார், அக்காள் என்றும் பாராமல் சுவாதியை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

Next Story