முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு: விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தாரா? போலீசார் விசாரணை


முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு: விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்தாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Dec 2021 4:43 AM IST (Updated: 4 Dec 2021 4:43 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சாவு வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

ஆலந்தூர்,

சென்னை வேளச்சேரி புதிய தலைமை செயலகம் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் வெங்கடாச்சலம் (வயது 62). தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக கடந்த அ.திமு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் இவர், தனது பதவியை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாகவும் சொத்து சேர்த்ததாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த செப்டம்பர் மாதம் 24-ந்தேதி அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.13 லட்சம், சுமார் 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை சோதனையில் கண்டறியப்பட்டன.

இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணைக்கு பயந்து...

இந்தநிலையில் அவர், நேற்று முன்தினம் வேளச்சேரியில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி போலீசார் வெங்கடாசலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெங்கடாசலம் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தநிலையில், அவரது சாவுக்காக காரணம் குறித்து வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்பவத்தன்று வெங்கடாசலத்தைத் தொடர்பு கொண்டு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் வந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

எனவே விசாரணைக்கு பயந்து வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், வெங்கடாசலம் தற்கொலை செய்வதற்கு முன்பு யாரிடம் பேசி உள்ளார் என அறிய அவரது செல்போனை சைபர் கிரைம் போலீசார் ஆராய திட்டமிட்டுள்ளனர்.

Next Story