தி.மு.க. அரசை கண்டித்துஅ.தி.மு.க. 9-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு


தி.மு.க. அரசை கண்டித்துஅ.தி.மு.க. 9-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 4:33 AM IST (Updated: 7 Dec 2021 4:33 AM IST)
t-max-icont-min-icon

தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க கோரியும், மக்கள் பிரச்சினைகளில் தி.மு.க. அரசு கவனம் செலுத்தவில்லை என்று கூறியும் அ.தி.மு.க. சார்பில் 9-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலோ, மக்களின் அன்றாடத் தேவைகளையும், அவர்கள் சந்திக்கும் ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலோ மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் வாய்ச்சவடால் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், மக்களுக்கு மேலும், மேலும் சுமைகளை ஏற்றும் தி.மு.க. அரசின் செயல்களை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நெற்பயிர் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். மறு சாகுபடிக்கென ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் அளிக்கப்பட வேண்டும். கரும்பு, பருத்தி, கிழங்கு வகைகள், தோட்டப்பயிர்கள், வாழை என்று மற்றவகை விளைச்சலை இழந்தோருக்கு முழுமையான நிவாரணம் அளிக்க வேண்டும்.

பொங்கல் விழாவைக் கொண்டாட மக்கள் அனைவருக்கும் ரொக்கமாக உதவித்தொகை தருவது, இன்று நிலவும் கொரோனா சூழலில் மிகவும் இன்றியமையாதது. மழை, வெள்ள பாதிப்புகளையும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்புகளையும், உற்பத்தி வீழ்ச்சியையும், விலைவாசி உயர்வையும் கருத்தில்கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசாக அளிக்க வேண்டும்.

அம்மா மினி கிளினிக்குகளை மூட அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. இது மிகவும் தவறான, மனிதாபிமானமற்ற, முன் யோசனையற்ற முடிவு என்று கண்டிக்கிறோம்.

கண்டன ஆர்ப்பாட்டம்

தி.மு.க. அரசின் அலட்சியத்தால் அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து, மக்களின் அன்றாட வாழ்வு பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனை தி.மு.க. அரசு உடனடியாக சீர் செய்திட வேண்டும். கனமழை, பெருவெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலமானாலும் சரி, கொரோனா கொடுந்தொற்று நோய் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும் சரி தங்கள் உயிரை துச்சமென மதித்து, அல்லும் பகலும் அயராது ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், மக்கள் நலன் காக்கும் பல்வேறு பணிகளை செய்யத் தவறி வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் துயரங்களுக்கு தீர்வுகாண வலியுறுத்தியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story