தமிழகத்தில் 8,690 ஏரிகள் நிரம்பின அரசு தகவல்


தமிழகத்தில் 8,690 ஏரிகள் நிரம்பின அரசு தகவல்
x
தினத்தந்தி 8 Dec 2021 4:47 AM IST (Updated: 8 Dec 2021 4:47 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 8 ஆயிரத்து 690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

சென்னை,

கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 3.6 மி.மீ. ஆகும். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் (274.6 மி.மீ.) அதி கனமழையும், தென்காசி மாவட்டம் ஆயிகுடி (101 மி.மீ.) மற்றும் தேனி மாவட்டம் பெரியாறு (81 மி.மீ.) ஆகிய இரண்டு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.

தென்காசியில் 41.06 மி.மீட்டரும், தர்மபுரியில் 19.74 மி.மீட்டரும், திருச்சியில் 13.68 மி.மீட்டரும், புதுக்கோட்டையில் 9.25 மி.மீட்டரும், தேனியில் 9.15 மி.மீட்டரும், திருவண்ணாமலையில் 6.74 மி.மீட்டரும், கன்னியாகுமரியில் 6.29 மி.மீட்டரும், நாமக்கல்லில் 6.09 மி.மீட்டரும், வேலூரில் 5.37 மி.மீட்டரும், கரூரில் 4.42 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 7.12.2021 வரை 683.4 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவை விட (385.9 மி.மீ.) விட 77 சதவீதம் கூடுதல் ஆகும்.

முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள்

நிவாரண முகாம்களை பொறுத்தவரையில் சென்னையில் 257 நபர்கள் 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதர மாவட்டங்களில் 2,156 பேர் 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில் 8,690 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 2,989 ஏரிகள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பியுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.-ல் 6-ந் தேதி நிலவரப்படி 212.009 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. இது 94.52 சதவீதம் ஆகும். செம்பரம்பாக்கம் ஏரியில் 3,233 மில்லியன் கன அடி நீரும், செங்குன்றம், பூண்டி ஏரிகளில் தலா 2,970 மில்லியன் கன அடி நீரும், சோழவரம் ஏரியில் 814 மில்லியன் கன அடி நீரும், வீராணத்தில் 894 மில்லியன் கன அடி நீரும், வீராணத்தில் 500 மில்லியன் கன அடி நீரும், மேட்டூரில் 93,470 மில்லியன் கன அடி நீரும், பவானிசாகரில் 32,379 மில்லியன் கன அடி நீரும், வைகையில் 5,855 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.

வீடுகள்-குடிசைகள் சேதம்

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 6 பகுதிகளில் அதிக திறன் கொண்ட 26 பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 19,740 மருத்துவ முகாம்கள் மூலம் 6,48,689 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 2 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. 47 கால்நடைகள் இறந்துள்ளன. 633 குடிசைகள் பகுதியாகவும், 55 குடிசைகள் முழுமையாகவும் என மொத்தம் 688 குடிசைகளும், 100 வீடுகள் பகுதியாகவும், 15 வீடுகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 115 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதுவரை 1,27,811 ஹெக்டேர் வேளாண்மை பயிர்களும், 16,447 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்படைந்தன.

புகார்கள்

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 13,450 புகார்கள் வரப்பெற்று, 12,042 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு (கட்டணமில்லா தொலைபேசி எண் - 1070) வரப்பெற்ற 7,227 புகார்களில் 6,937 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077) வரப்பெற்ற 7,040 புகார்களில், 6,958 புகார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story