கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு


கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆய்வு
x
தினத்தந்தி 8 Dec 2021 5:15 AM IST (Updated: 8 Dec 2021 5:15 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மீண்டும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

சென்னை,

தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்த போதிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, போர்க்கால அடிப்படையில் பணியாற்றி வருவதால் வெள்ள பாதிப்புகள் விரைவாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைந்து மேற்கொண்டு வருவதை ஆய்வு செய்து வருகிறார்.

மு.க.ஸ்டாலின் ஆய்வு

அதன் தொடர்ச்சியாக, கடந்த 29-11-2021 அன்று கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இரும்புலியூர் மற்றும் முடிச்சூர் பகுதிகளையும், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வரதராஜபுரம் பகுதிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் நகராட்சி, இரும்புலியூர், வன்னியன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

வெள்ளத்தடுப்பு பணிகள்

பின்னர், முடிச்சூர் ஊராட்சி, அமுதம் நகரில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அமுதம் நகரில் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிவதற்காக வெளிவட்ட சாலையில் உள்ள அடையாறு ஆற்றுப் பாலத்தினை அகலப்படுத்திட வேண்டும் என்றும், அமுதம் நகரில் தேங்கும் மழைநீரை அடையாறு ஆற்றுப் பாலத்தில் சேர்க்கும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கால்வாயினை நிரந்தரமாக அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திறந்தவெளி கால்வாய்

தொடர்ந்து, முடிச்சூர் ஏரியில் இருந்து வரும் கூடுதல் நீரை சிக்கனா ஏரி வழியாக அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் திறந்தவெளி கால்வாய் அமைத்திடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், காஞ்சீபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி, பி.டி.சி. குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளின் விவரங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

மேலும், மகாலட்சுமி நகர் மேம்பாலப் பகுதியில் நீர்வள ஆதாரத்துறையால் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இறுதியாக, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்ணூறான்குளத்தில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது இச்சுத்திகரிப்பு நிலையம் தற்போது 90 சதவீத திறனுடன் செயல்பட்டு வருவதால், தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளையும் இச்சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைத்து முழு திறனுடன் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பங்கேற்றவர்கள்

இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கு.செல்வப்பெருந்தகை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பி.அமுதா, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், நகராட்சி நிர்வாக இயக்குநர் பி.பொன்னையா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆ.ர.ராகுல் நாத், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story