அம்பத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு


அம்பத்தூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
x
தினத்தந்தி 8 Dec 2021 9:28 PM GMT (Updated: 8 Dec 2021 9:28 PM GMT)

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் பகுதியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

சென்னை,

கனமழை தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாடி குப்பம் ரெயில் நகரில் அமைந்துள்ள தரைப்பால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, கனமழையால் பழுதடைந்துள்ள தரைபாலத்தை சீரமைத்திடவும், நெடுஞ்சாலைத்துறை மூலம் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கொரட்டூர் ஏரி

பின்னர், கருக்கு பிரதான சாலை, கொரட்டூர் ஏரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத்தடுப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மேலும், கொசஸ்தலையாற்று வடிநிலை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள ரெயில்வே பாதையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் கான்கீரிட் தரைதளத்துடன் கூடிய வெள்ள தடுப்பு சுவர் அமைக்கும் பணியினை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மழை காலங்களில் அம்பத்தூர் பகுதியில் மழைநீர் தேங்காவண்ணம் உபரிநீரை கொரட்டூர் ஏரிக்குள் கொண்டு செல்ல கூடுதலாக ஒரு சிறு பாலம் அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சிக்கும் மற்றும் இரண்டு வெள்ள சீராக்கி அமைக்க பொதுப்பணித்துறைக்கும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்.எல்.ஏ., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story