குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து வீடியோ உண்மையா? - செல்போன் தடவியல் ஆய்வு
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியின் வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத் த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான விசாரணை குழுவினர் அங்கேயே முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நேற்று அந்த பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் விமானப்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அப்பகுதி மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் நாகராஜன், குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் ஆகியோரிடம் விபத்து நடந்த பகுதிக்கு முதலில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீ காயத்துடன் மீட்கப்பட்டவர்கள், இறந்த நிலையில் மீட்கப்பட்ட உடல்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயர் அழுத்த மின் கம்பி இருந்ததா? அவை சேதமாகி உள்ளதா? என்பது குறித்து அறிய மின்வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் வானிலை நிலவரம் எப்படி என்பது குறித்து தகவல் அளிக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கும் விசாரணை குழு கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே விபத்து நடப்பதற்கு முன்பு அந்த ஹெலிகாப்டர் வானில் பறப்பதும், சிறிது நேரத்தில் மேகக்கூட்டத்தில் மறைவது போன்ற காட்சிகளும், பின்னர் கீழே விழுவது போன்ற சத்தத்துடன் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ தான் ஹெலிகாப்டர் விபத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி நிமிட வீடியோவாகும்.
முப்படைத்தளபதி சென்ற அதிநவீன ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதால் போலீசார் இதனை முக்கிய ஆதாரமாக கருதினர். இதையடுத்து அதனை கைப்பற்றி விசாரணை நடத்த முடிவு செய்த போலீசார், ஹெலிகாப்டர் விபத்து நடப்பதற்கு முன்பு அதனை வீடியோ எடுத்த நபரின் செல்போனை பறிமுதல் செய்து கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story