கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்


கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2021 7:09 PM GMT (Updated: 12 Dec 2021 7:09 PM GMT)

கிராம கோவில் பூசாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பூசாரிகள் மாநாட்டில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

மதுரை,

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், கிராம கோவில் பூசாரிகள் பேரவை மற்றும் அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மதுரை மாவட்ட முதல் மாநாடு, கருமாத்தூரில் நேற்று நடந்தது. மாநாட்டில் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மதுரை மாவட்ட தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார்.

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் நிறுவனரும், கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிர்வாக அறங்காவலருமான எஸ்.வேதாந்தம் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழ் கலாசாரம்

தமிழ் கலாசாரம், பண்பாடு வளர கிராம கோவில்கள்தான் காரணம். நாட்டின் எல்லையை ராணுவத்தினர் காவல் காத்து வருகின்றனர். கிராம எல்லைகளை கிராம கோவில் பூசாரிகள் காத்து வருகின்றனர்.

பூசாரிகள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பட்டப்படிப்பும் படிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு சம்பளம் ரூ.20 ஆயிரமாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் ரூ.2 ஆயிரமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.ஆர்.கோபால்ஜி

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி பேசியதாவது:-

தமிழகத்தில் 2 லட்சம் கிராம கோவில்கள் உள்ளன. 6 லட்சம் பூசாரி குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கென்று ஓட்டு வங்கி உள்ளது. ஒரு தொகுதிக்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்வது இந்த ஓட்டுகள்தான்.

இருந்தபோதும், கிராம கோவில் பூசாரிகளின் கோரிக்கைகளை அரசியல்வாதிகள் நிறைவேற்றுவதில்லை. பூசாரிகள் முன்பைவிட படிப்படியாக முன்னேறியுள்ளனர். இன்னும் முன்னேற வேண்டும்.

குறிப்பாக மந்திரங்கள் கற்று தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். மந்திரங்கள் கூறி வழிபாடு நடத்தும்போது, பக்தர்களின் மத்தியில் பூசாரிகளுக்கு மரியாதை உயரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை

முன்னதாக மாநாட்டில், “பூசாரிகளின் ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாக உயர்த்திய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி. கிராம கோவில் பூசாரிகளின் மாத ஊக்கத்தொகை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக்க வேண்டும். அறங்காவலர் குழுவில் பூசாரிகளையும் இணைக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story