பெங்களூருக்கு அனுப்பப்பட்ட மாதிரி: 4 பயணிகளுக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை அமைச்சர் தகவல்


பெங்களூருக்கு அனுப்பப்பட்ட மாதிரி: 4 பயணிகளுக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2021 3:38 AM IST (Updated: 14 Dec 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருக்கு அனுப்பப்பட்ட 4 பயணிகளின் மாதிரிகளில் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதியோர் அறிவுத்திறன் மேம்பாடு, ஆதரவற்ற மனநோயாளிகள் அவசர சிகிச்சை மற்றும் மீள் வாழ்வு மையம், இளைஞர்களுக்கான இணையதள சார்பு நிலை மீள் வாழ்வு மையம், பிரசவத்திற்கு பிந்தைய மன அழுத்தத்திற்கான சிறப்பு ஆலோசனை, பச்சிளங்குழந்தைகள் செவித்திறன் கண்டறிதல் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சை மையங்களை தொடங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த மையங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அங்குள்ள பயனாளிகளுடன் ‘கேரம்’ விளையாடினர்.

அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னா் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

22 சதவீத பெண்கள்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்கள் தமிழகத்தில் உள்ள 22 அரசு ஆஸ்பத்திாிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 22 சதவீத பெண்கள் பிரசவத்திற்கு பின்பு மனஅழுத்தத்தில் பாதிக்கப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் ஆயிரம் பச்சிளம் குழந்தைகளில் 1.42 சதவீதம் குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு உள்ளது.

தமிழகத்தில் ரூ.140 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு, 11 புதிய மருத்துவ கல்லூரிகளின் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1,450 மாணவர்களை கூடுதலாக சேர்க்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழகத்தில் கோவை அரசு மருத்துவ கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர்களுக்கும், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 28 முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை

‘ஒமைக்ரான்’ பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வந்த 10 ஆயிரத்து 710 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும், இதர நாடுகளில் இருந்து வந்த 54 ஆயிரத்து 68 நபர்களுக்கு 2 சதவீத பரிசோதனை என்ற அடிப்படையில் 1,577 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 25 நபர்களுக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் 4 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன. இவர்கள் 4 பேரும் டெல்டா வகை வைரசால் தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் ‘ஒமைக்ரான்’ வைரஸ் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 82 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 51 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story